மனித மனதின் திறன். உங்கள் மனதின் வயது என்ன தெரியுமா? உங்கள் உடலின் வயது தான் மனதின் வயது. தாயின் கருவறையில் உதித்த நாளிலிருந்து இன்று வரையில் உங்கள் ஐம்பொறிகள் அனுபவம் செய்த அனைத்தையும் உங்கள் மனம் பத்திரமாக பதிவு செய்து வைத்துள்ளது. நீங்கள் அறியாத, உங்களுக்குத் தெரியாத உங்களைப் பற்றிய விசயங்களும் உங்கள் மனப்பதிவில் இருக்கும்.
ஒரு மனிதனின் உடலில் நடக்கும் ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு மாற்றமும், ஒவ்வொரு பாதிப்பும் அவன் மனதில் பதிவாகும். ஒரு மனிதனுக்கு உண்டாகியிருக்கும் பாதிப்பும், அந்தப் பாதிப்பு உருவாகக் காரணமும், அந்தப் பாதிப்பைக் குணப்படுத்தும் வழிமுறையும், மனதுக்குத் தெளிவாகத் தெரியும்.
ஒரு மனிதனுக்கு உடல் அல்லது மனநிலையில் தொந்தரவு உண்டாகும் போது உடல் காட்டும் அறிகுறிகளைக் கொண்டு பாதிப்புகளையும் பாதிப்பு உண்டான பகுதிகளையும் இனங்கண்டு கொள்ளலாம். ஒரு பாதிப்பு உண்டானால், அது ஏன் எப்படி எதனால் உருவானது? அதற்கான தீர்வு என்ன? அதைக் குணப்படுத்தும் வழிமுறைகள் என்ன? என்பன போன்ற முழுமையான விவரங்கள் உங்கள் மனதில் பதிவாக இருக்கும்.
உடல் மற்றும் மனதின் அறிகுறிகளைப் பின்பற்றி அவற்றுடன் ஒத்துழைத்தால் அனைத்து வகையான தொந்தரவையும் குணப்படுத்திக் கொள்ள முடியும். மனம் நினைத்தால், மனதுடன் ஒத்துழைத்து நம்பிக்கையுடன் இருந்தால் அனைத்து வகையான தொந்தரவும் தடம் தெரியாமல் மறைந்து போகும்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாகக் குணமாவதும், பெரிய பாதிப்புகள் திடீரென்று குறைவதும், பிழைக்க மாட்டார் என்று மருத்துவர் கூறிய நபர் பிழைத்துக் கொள்வதும், நிச்சயமாகப் பிழைத்துக் கொள்வார் எனும் நபர் சிகிச்சைப் பலனின்றி மரணிப்பதும், எப்படி என்று சிந்தித்தால் மனித மனதில் திறனும் தன்மையும் புரியவரும்.