மனம்

மனதோடு பேசலாம் ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்

மனதோடு பேசலாம் ரகசியங்களை அறிந்து கொள்ளலாம். மனதுடன் பேசவும், மனதிடம் இருந்து இரகசியங்களையும், தகவல்களையும் அறிந்துக் கொள்வதற்கும் ஒரு எளிய வழிமுறை.

மனிதர்களின் இடையூறு இல்லாத ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த தியான முத்திரையைப் பயன்படுத்துங்கள். தியானத்தில் அமைதியாக அமர்ந்து, உங்களை கவனிக்கத் தொடங்குங்கள்.

நீங்கள் சுவாசிப்பதைக் கவனியுங்கள். உங்கள் மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள் செல்கிறது என்பதைக் கவனியுங்கள். உடலின் உள்ளே அந்த காற்று எங்கெல்லாம் பிரயாணம் செய்கிறது என்பதைக் கவனியுங்கள். அந்த மூச்சுக் காற்று எவ்வாறு உள்ளே செல்கிறது, எங்கெல்லாம் பயணப்பட்டு பின்பு எவ்வாறு உடலை விட்டு வெளியேறுகிறது என்பதைக் கவனியுங்கள்.

எந்த கற்பனையும் செய்ய வேண்டாம், மந்திரம் ஜெபிக்க வேண்டாம், எந்த வார்த்தையையும் உச்சரிக்க வேண்டாம். நீங்கள் அமைதியாக இருந்தால் போதும், சிறிது நேரத்தில் மனமும் அமைதி அடையும்.

அமைதியான மனம் உங்களிடம் தன் கவலையை வெளிப்படுத்தலாம், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரலாம் நடக்கப் போகின்ற விஷயங்களைத் தெரியப்படுத்தலாம், முன்னெச்சரிக்கையாக நடக்கவிருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டலாம், புதிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உலகின் ரகசியங்களைக் கூட உங்களுக்கு அறிவிக்கலாம்.

என்ன நடந்தாலும் மனம் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருங்கள். அதைக் கட்டுப்படுத்தவோ அல்லது அதற்குப் பதில் சொல்லவோ வேண்டாம். வெறும் பார்வையாளர்களைப் போன்று பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருங்கள்.

உங்களின் கவனிப்பும் மன ஓர்மையும், தொடர்ந்து இருந்தால்; உங்கள் மனதின் ஆற்றல் அதிகரிக்கும். பல அரிய தகவல்களையும், அமானுஷ்யமான விஷயங்களையும், ரகசியங்களையும், உங்களுக்கு வெளிப்படுத்தும். சில கால தியானப் பயிற்சிகளுக்குப் பிறகு, உங்கள் மனம் சாதாரண விழிப்பு நிலையில் இருக்கும் போதே உங்களுடன் உரையாடும். உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும், உங்களுக்கு வழிகாட்டும்.

இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால். தியானத்திலோ, அல்லது பொதுவிலோ மன இச்சை என்று அழைக்கப்படும், உங்களின் மன ஆசைகளே உங்களுடன் முதலில் பேசும். அது உங்களுக்கு எந்த நன்மையையும் தராது. அது தனது கற்பனைகளை, ஆசைகளை, மற்றும் வக்கிரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்.

உன்னிப்பாக மனதின் வார்த்தைகளைக் கவனிக்கப் பழகிக் கொண்டால் மனோ இச்சையின் வார்த்தைகளுக்கும் மனதின் வார்த்தைகளுக்கும் வேற்றுமையைக் கண்டு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X