மனதின் வேலைகள் என்ன? மனதின் பிரதான வேலை, பதிவு செய்வதும், பதிவு செய்தவற்றைச் செயல்படுத்துவது. உணர்தல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் என மனிதன் அனுபவிக்கும் அத்தனை விசயங்களையும் மனம் பதிவு செய்கிறது. மனிதன் உறக்கத்தில் இருந்தாலும், உணர்ச்சிகளற்று இருந்தாலும், அவ்வளவு ஏன், கோமா நிலையில் இருந்தாலும் கூட மனம் இயங்கிக் கொண்டிருக்கும்.
எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் கோமா நிலையில் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவர் குணமடைந்து வீடு திரும்பியதும் சில அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். கோமா நிலையில் மருத்துவமனையில் இருந்தபோது அவர் உடலின் வெளி உறுப்புகள் இயங்கவில்லை ஆனால் அவரின் மனமும் செவிகளும் இயல்பாக இயங்கியுள்ளன. அங்கிருந்த போது அவரைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை அவரால் தெளிவாக உணர முடிந்தாக கூறினார்.
அங்கிருந்த தாதிகள் என்னவெல்லாம் பேசிக் கொண்டார்கள் என்பது அவருக்குத் தெளிவாக விளங்கியதாகவும், சுய நினைவு திரும்பியதும் அவர் சுயநினைவு இல்லாமல் இருந்த போது கேட்ட குரலை வைத்துப் பேசிய தாதிகளை அடையாளம் கண்டு கொண்டதாகவும் கூறினார். இவரைப் போன்று கோமா நிலைக்குச் சென்ற பலர் சுயநினைவு திரும்பியதும் கோமா நிலையில் சுயநினைவற்று இருந்த போது தங்களைச் சுற்றி யாரெல்லாம் இருந்தார்கள்? அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள்? சுயநினைவற்று இருந்த போது தங்களுக்கு என்னவெல்லாம் நடந்தது போன்றவற்றை விவரமாகக் கூறியிருக்கிறார்கள்.
மனம் பதிவு செய்வது மட்டுமின்றி, அந்த பதிவுகள் தொடர்பான மற்ற விசயங்களையும் ஆராய்கிறது. அதே நேரத்தில் மனதில் உண்டான பதிவுகள் தொடர்புடைய மனிதர்கள், நிகழ்வுகள், மற்றும் பொருட்களுக்கிடையில் தொடர்புகளையும் உண்டாக்குகிறது. மனதில் ஒரு பதிவு உருவாகிவிட்டால் அது நிலத்தில் விதைத்த விதையைப் போன்றது. விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை. மனதில் விதைக்கப்பட்ட ஒவ்வொரு விதையும் ஒவ்வொரு நிமிடமும் முளைத்துத் துளிர்த்துக் கொண்டே இருக்கும்.
பெரியவர்களான பிறகு கூட சில விசயங்களை அல்லது சில பொருட்களைப் பார்க்கும் போதும், சிறு வயதில் இதற்காக ஆசைப்பட்டேன் கிடைக்கவில்லை என்று சிலர் கூறுவதுண்டு. சில விசயங்களைச் செவிமடுக்கும் போது எங்கேயோ கேட்ட ஞாபகம் என்று கூறுவதுண்டு. சில மனிதர்களைப் பார்க்கும் போதும், சில இடங்களுக்குச் செல்லும் போதும், எப்போதோ சந்தித்த உணர்வுகள் வருவதுண்டு. இவை அனைத்தும் நம் மனதில் பதிந்துவிட்ட பதிவுகளால் உருவாகும் உணர்வுகளே.
Leave feedback about this