மனதின் அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு. மனம் மனிதனின் பிரதானக் கருவியாகும். அது சீராக இருந்தால் மனிதனின் வாழ்க்கையும் சீராக இருக்கும். மனம் மட்டும் சீர்கெட்டு விட்டால் மனிதனின் முழு வாழ்க்கையும் சீர்கெட்டுவிடும். மனதின் தொந்தரவும் சமமின்மையும் மனதில் மட்டும் தொடங்குவதில்லை. உடலில் உண்டாகும் மாற்றங்கள் கூட மனதில் சமமின்மையையும் தொந்தரவையும் உருவாக்கலாம்.
உடலும் மனமும் ஒன்றுடன் ஒரு தொடர்புடையது. மனதில் தோன்றும் போட்டி, பொறாமை, எரிச்சல், அச்சம், கவலை, துக்கம், கர்வம், திமிர், போன்ற தீய குணங்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்தில் பாதிப்பை உருவாக்கும். உடல் உறுப்புகளில் உருவாகும் ஆற்றல் குறைபாடுகளும் பாதிப்புகளும் மனதில் பாதிப்பை உருவாக்கும்.
மனக் குழப்பங்களுக்குத் தீர்வு
மனதில் உருவாகும் அனைத்து வகையான மாற்றங்களுக்கும், வேதனைகளுக்கும், குழப்பங்களுக்கும், தீர்வாக இருக்கக் கூடியது;
உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மட்டுமே.
இன்றைய மனிதர்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், உடலளவிலும் மனதளவிலும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். நாகரீக வாழ்க்கை என்ற போர்வையில் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மனம் தனது அமைதியை இழக்கும் போது மனதில் உண்டாகும் மாற்றங்களுக்கு பலவகையான பெயர்களைச் சூட்டுகிறார்கள். இந்தத் தொந்தரவுகளுக்கு சூட்டப்படும் பெயர்களே மனதின் குழப்பங்களை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. மன அழுத்தம், மனக் குழப்பம், மனச் சோர்வு என்று பல பெயர்களில் அழைத்தாலும்; மனதில் அமைதி இன்மையையே இந்தச் சொற்கள் குறிப்பிடுகின்றன.
ஒரு மனிதன் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்? ஏன் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை என்று குழம்பாமல். ஒரு நிகழ்வை ஏன் இவ்வாறு நடந்தது, ஏன் அவ்வாறு நடக்கவில்லை என்று மனதைக் குழப்பிக் கொள்ளாமல். அந்த மனிதரையும் நிகழ்வினையும் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொண்டால் மன வேதனையும், அழுத்தமும் உருவாகாது.
உறவினர்களையும், நண்பர்களையும், உடன் பணிப் புரிவோர்களையும், அவர்களின் இயல்புடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு உருவாகிவிட்டால். அது கடுமையான மன வேதனையை நிச்சயமாக உருவாக்காது. பிற மனிதர்களை நம்முடனும், நம்மை பிற மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் செயலைக் கைவிட வேண்டும். இதுவும் மனவேதனைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையுடன் படைக்கப்பட்ட உயிரினம் என்பதையும், இரு மனிதர்கள் ஒன்றைப் போல் இருக்கமாட்டார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காமல், மனிதர்களையும் வாழ்க்கையையும் ஒப்பிடாமல், சார்ந்து வாழாமல், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டால்; மன அழுத்தமும், சோர்வும், கவலையும், வேதனையும், நிச்சயமாக நமக்கில்லை.
மனதில் அமைதியின்மை உருவானால் அதற்கு எந்தப் பெயரையும் சூட்டாதீர்கள். மனம் அமைதி இல்லாமல் இருக்கிறது என்ற வகையில் மட்டும் அவற்றை அணுகுங்கள். இவ்வாறாக மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன காரணம்? அந்தச் சூழ்நிலை, அந்தக் குழப்பம், அந்த சோர்வு, அந்த அச்சம், அந்த அழுத்தம், உருவாக மூலகாரணமாக இருப்பது எது? என்று சிந்தித்தால்; அந்த நிலையில் இருந்து வெளிவர எளிமையான வழிகள் நிச்சயமாகக் கிடைக்கும்.
அதைவிடுத்து மனதின் குழப்பங்களுக்கு ஒரு பெயரைச் சூட்டி, அந்தப் பெயரை வைத்துக் கொண்டு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தால், மனம் தனது அமைதி நிலையை அடைவது கடினம்.