மனதில் நம்பிக்கையை உருவாக்க சில வழிமுறைகள். மனம் ஒரு விசயத்தை நம்ப வேண்டுமென்றால், அந்த விசயத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அந்த விசயத்தைக் கற்பனையில் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த விசயம் உங்களுக்குக் கிடைத்துவிட்டது போலவும், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும் ஒரு உணர்வு உங்களுக்குள் தோன்ற வேண்டும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, ஸ்டைல், அனைத்துமே நடிகர் ரஜினிகாந்த்தைப் போலவே அமைந்திருக்கும். காரணம் அவர்கள் ரஜினிகாந்தின் படங்களை திரும்பத் திரும்பப் பார்த்தார்கள், அவரைப் பற்றியே சிந்தித்தார்கள், அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே மறுக்கிறார்கள். மனம் இவ்வாறுதான் செயல்படுகிறது.
எவரொருவர் ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் நினைக்கிறாரோ, மீண்டும் மீண்டும் சிந்திக்கிறாரோ, மீண்டும் மீண்டும் படிக்கிறாரோ; அவர் அந்த விசயமாகவே மாறுகிறார். அந்த விசயத்துக்கும் அவருக்கும் சூட்சும நிலையில் ஒரு உறவும் பந்தமும் உருவாகிறது. அந்த விசயம் இருக்கும் இடத்தை நோக்கி இவர் பயணிக்கிறார் அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்த விசயம் இவரை வந்தடைகிறது.