மனதை பாதுகாக்கும் வழிமுறைகள். மனம் என்பது அற்புதமான மற்றும் சக்திவாய்ந்த கருவியாகும். எந்த சூழ்நிலையிலும் அதற்கு பாதிப்பு உருவாகாமல் இருப்பதற்கு இவற்றைப் பின்பற்றுங்கள்.
1. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மை இருக்கும், அதனால் எந்த சூழ்நிலையிலும் உங்களைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
2. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதனால் யாருடைய அங்கீகாரத்தையும் பாராட்டையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. நீங்கள் என்ன செய்கிறீர்கள், எதற்காகச் செய்கிறீர்கள் என்பது அனைவருக்கும் புரிவதற்கு வாய்ப்பில்லை, அதனால் யாருடைய கருத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
4. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை, உங்களின் திறமை என்ன? உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை ஆராய்ந்து புரிந்துக்கொள்ளுங்கள்.
5. உலகம் ஓடும் வேகத்தில் பின்தங்கிவிடக் கூடாது, அதனால் தினமும் புதிய விசயங்களை வாசியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்.
6. உங்களைச் சுற்றி உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு திறமை இருக்கும், மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசி தெரியாத விசயங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
7. எல்லோராலும் எல்லா விசயங்களையும் செய்ய முடியாது, எல்லாரும் எல்லா விசயங்களையும் செய்ய வேண்டிய தேவையும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
8. உங்களிடம் உள்ளவற்றை, உள்ளது உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாதவற்றை எண்ணி மனவேதனையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.
9. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விசயங்களையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளுங்கள். ஏன் அப்படி நடக்கிறது? ஏன் இப்படி நடக்கிறது? ஏன் அவ்வாறு நடக்கவில்லை? என்று கேள்விகள் கேட்டு மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
10. வாழ்க்கையில் எந்த வகையான சோதனை உருவானாலும், அது என்ன? அது உருவாகக் காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன? என்று நிதானமாகச் சிந்தியுங்கள். எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாதீர்கள்.
11. எந்த விசயத்தையும் நிகழ்வையும் நினைத்தும் வேதனைப்படாதீர்கள். காரண காரியமின்றி எதுவுமே நடக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
12. குடும்பத்திலும், சமுதாயத்திலும், உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள், மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
13. அவரவருக்கு விதிக்கப்பட்டதை தான் அவரவர் அனுபவம் செய்ய முடியும், யாரையும் பார்த்து பொறாமை படாதீர்கள், கனவிலும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதீர்கள்.
14. இயற்கையே சிறந்த வழிகாட்டி, இயற்கையுடன் உறவாடுங்கள், இயற்கைக்குத் திரும்புங்கள், உணவு முதல் மருத்துவம் வரையில் அனைத்தையும் இயற்கை சார்ந்ததாக வைத்துக்கொள்ளுங்கள்.
15. உடலில்லாமல் இந்த உலகில் எதையும் அடைய முடியாது, உடலையும் உணவையும் பேணிக் கொள்ளுங்கள், அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்.
16. ஓய்வும் பசியும் சிறந்த மருத்துவம், வயிற்றுக்கும் உடலுக்கும் மனதுக்கும் தேவையான ஓய்வையும் உறக்கத்தையும் கொடுங்கள்.