மனம்

மனதை அடக்குவது எப்படி?

man riding on back of horse

மனதை அடக்குவது எப்படி? வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு வகையான தவறை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஒரு தவற்றைச் செய்வதும் பின் அதை நினைத்து வருந்துவதும், மீண்டும் தவறு செய்யக்கூடாது என்று எண்ணுவதும், சில நாட்களில் அதே தவறை மீண்டும் செய்வதும் பலருக்கு தொடர்கதையாகவே இருக்கிறது.

தீய பழக்கம் என்று உணர்ந்து அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டும், அதை விடமுடியாமல் சிலர் அவதிப்படுவார்கள். சிலர் இன்றோடு இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று பலமுறை முயன்றும் தோற்றுப் போயிருப்பார்கள்.

இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? மனிதர்கள் எதனால் தவறு செய்கிறார்கள்? அதுவும் தவறு என்று தெரிந்தும் எதனால் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்? தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்த பிறகும் அவர்களை மீறி தவறுகளைச் செய்ய வைப்பது எது? என்பதை ஆராய்ந்தால்…

மனிதர்கள் செய்யும் அத்தனை தவறுகளுக்கும் அவர்களின் மனம்தான் காரணமாக இருக்கிறது. மனிதர்கள் தங்களின் ஐம்பொறிகளைக் கொண்டு காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மற்றும் உணர்வதின் மூலமாக; அவர்களின் மனதில் உருவாகும் பதிவுகளே, அவர்களை தவறு செய்யத் தூண்டுகிறது.

சரி – தவறு என்ற பேதம் இல்லாமல் மனிதர்களின் ஐம்பொறிகள் அனுபவம் செய்யும் அனைத்தையும் மனம் பதிவு செய்துகொள்கிறது. இந்தப் பதிவுகள் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்படும் வேளைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன. அந்தப் பதிவுகளினால் தோன்றும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளுக்கு ஏற்ப மனம் இயங்குகிறது மனிதனை இயக்குகிறது.

மனதுக்கு கால அளவு கிடையாது

இன்று ஒரு மனிதன் செய்யும் தவறுக்கு இன்றோ நேற்றோதான் மனப் பதிவுகள் உருவாகியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. என்றோ இளம் வயதில் அவன் மனதில் பதிந்துவிட்ட ஒரு பதிவுகூட அவன் நாற்பது வயதில் தவறு செய்வதற்குக் காரணமாக இருக்கலாம்.

மனதைக் கட்டுப்படுத்த முடியாதா? மனதை அடக்க முடியாத? இவ்வாறான கேள்வி அனைவராலும் காலகாலமாக கேட்கப்பட்டு வருகிறது. மனதை அடக்கவும் அதைக் கட்டுப்படுத்தவும் பலர் பயிற்சிகளும் கொடுக்கிறார்கள். உண்மை என்னவென்றால், மனதை அடக்கவோ கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது.

நாம் பல இதிகாசங்களிலும் புராணங்களிலும் படித்திருப்போம், பெரிய முனிவர்கள் கூட மன இச்சைக்குக் கட்டுப்பட்டு தவறுகள் செய்வதை. உயர்ந்த இடத்தில் இருக்கும் பலரும் தங்கள் தகுதிக்குச் சம்பந்தமில்லாத ஈனச் செயல்களைச் செய்வதை இன்றும் நாளிதழ்களிலும் இணையத்திலும் பார்க்கிறோம். இவை அனைத்துக்கும் காரணம் ஐம்பொறிகளின் உதவியுடன் அவர்களின் மனதுக்குள் பதிந்துவிட்ட பதிவுகளே.

மனதைக் கட்டுக்குள் வைக்கும் ஒரே வழிமுறை

அப்படியானால் மனதைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா என்று கேட்டால்? ஒரேயொரு வழி இருக்கிறது. அதுதான் மனதினுள் தேவையற்ற பதிவுகள் உருவாகாமல் பாதுகாப்பது. மனதில் உருவாகும் பதிவுகள்தான் மனிதர்கள் தவறு செய்வதற்குக் காரணமாக இருக்கிறது, அவ்வாறு தவறு செய்வதற்கு தூண்டக்கூடிய பதிவுகள் உருவாகாமல் கவனமாக இருந்தால் போதும் மனதினுள் தீய எண்ணங்கள் உண்டாகாது.

உதாரணத்திற்கு “உங்களுக்கு விருப்பமான உணவு எது?” என்று யாரையாவது கேட்டால் அவரவர் மனப் பதிவில் எந்த உணவின் அனுபவம் இருக்கிறதோ, அவற்றில் எது மிகவும் அவரை கவர்ந்ததோ அதைச் சொல்லுவார். அதைப்போல் ஒருவரிடம் உலகிலேயே உனக்குப் பிடித்த நபர் யார் என்று கேட்டால், அந்த நபரின் வாழ்க்கையில் குறுக்கிட்ட அவர் அனுபவத்தில் இருக்கும் யாராவது ஒரு நபரைக் குறிப்பிடுவார்.

மனிதர்கள் எனக்கு விருப்பமானது, எனக்குத் தேவையானது, எனக்கு செய்ய விருப்பம் என்று கூறும், தேர்ந்தெடுக்கும் அனைத்துமே அவர்களின் மன பதிவுகளினால் முடிவுசெய்யப் படுகின்றன.

பதிவுகள் மனதை மாற்றும்

ஒரு மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு அவர் மனதில் இருக்கும் பதிவுகள் மட்டுமே காரணம். மனப் பதிவுகளை அனைத்திற்கும் காரணமாக இருப்பதால் நிரந்தரமான விருப்பு வெறுப்பு என்று யாருக்கும் இருக்காது. மனதின் பதிவுகள் மாற மாற அவர்களின் உணர்வுகளும், ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டே இருக்கும்.

தற்போது இருக்கும் தவறான பதிவுகள்

இதுவரையில் சேர்ந்த மனப்பதிவுகளை அழிக்கவோ மாற்றவோ முடியாது ஆனால் தேவையற்ற பதிவுகளைத் தவிர்க்க முடியும். உதாரணத்துக்கு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து மீண்டும் தாய்நாடு திரும்பியதும் பழைய நபர்கள், நண்பர்கள், மற்றும் உறவுகளின் பெயர்களை நினைவுகூர சிரமப்படுவார்கள். தான் பிறந்து வளர்ந்த ஊருக்குள்ளேயே பாதை தடுமாறுவார்கள். பணத்தைக் கூட தான் வேலை செய்த நாட்டின் நாணயத்தின் பெயரால் குறிப்பிடுவார்கள்.

இந்தத் தடுமாற்றங்களுக்குக் காரணம் அந்த நபரின் பழைய பதிவுகள் பல வருடங்கள் பயன்படுத்தாததால் செயலிழந்துவிட்டன. இளம் வயது முதலாக சேர்த்த மனப்பதிவுகள் மனத்தினுள் அப்படியே இருந்தாலும், தற்போது அந்தத் தவறான பதிவுகள் தொடர்புடைய புதிய பதிவுகள் எதுவும் உருவாகவில்லை என்றால், பழைய பதிவுகள் மெல்ல மெல்லச் செயல் இழந்துவிடும்.

நல்ல விசயங்களை, பார்ப்பது, கேட்பது, வாசிப்பது மற்றும் நல்ல மனிதர்களுடன் பழகுவதன் மூலமாக; நல்ல பயனான புதிய பதிவுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையற்ற செயல்களிலிருந்தும் தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட முடியும். சிந்தனையையும் பழக்க வழக்கங்களையும் குணாதிசயங்களையும் மாற்றிக்கொள்ள முடியும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field