மனப்பதிவுகளுக்கு ஏற்ற வாழ்க்கை தான் அமையும். கோயில் வாசலில் யானை கட்டியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். கடைகளிலும் தெருக்களிலும் யானையைக் கொண்டு சிலர் யாசகம் கேட்பதையும் பார்த்திருக்கலாம். யானை என்பது யாசகம் கேட்பதற்காகவும், ஆசீர்வாதம் செய்வதற்காகவும், படைக்கப்பட்ட விலங்கா?
யானை மனிதனைவிடவும் பல மடங்கு பெரிய விலங்கு, கட்டடங்களையும் இடித்து தரைமட்டம் ஆக்கக்கூடிய விலங்கு, மரத்தை வேரோடு பிடுங்கி எரியக் கூடிய பலசாலி, தன்னை பிணைத்திருக்கும் சங்கிலியை அறுத்து எரியாமல் இருப்பது ஏன்? ஒரு மனிதனுக்கும் அவனது கையில் இருக்கும் ஒரு சிறிய அங்குசத்துக்கும் அடங்குவது ஏன்? தன் இயல்பையும் பலத்தையும் மறந்து யானை செயல்படுவது ஏன்?
யானைக்கு உண்டான இந்த பலவீனத்துக்குக் காரணம் அதன் மனப் பதிவுகள். யானை குட்டியாக இருக்கும் பொழுதே அதன் தாயிடமிருந்து அதனைப் பிரித்துவிடுவார்கள். அந்த குட்டி யானையை, அதனால் அறுக்க முடியாத அளவு கனமான சங்கிலியைக் கொண்டு ஒரு காலை கட்டிவிடுவார்கள். அந்த யானைக் குட்டி எப்படியாவது அந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு விடுதலை பெற வேண்டும் என்று முயற்சி செய்யும். பல மாத முயற்சிக்குப் பிறகு தன்னால் அந்த சங்கிலியை அறுக்க முடியாது, முயற்சி செய்வது வீண் வேலை என்று முழுமையாக நம்பி, முயற்சி செய்வதை விட்டுவிடும்.
அதன் பிறகு அந்த யானைக் குட்டி சங்கிலியை அறுப்பதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை. அந்த யானைக் குட்டி வளர்ந்த பிறகும் கூட தனது காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை தன்னால் எந்த காலத்திலும் அறுக்க முடியாது என்ற பதிவு மாறாததால், தனது காலில் கட்டப்படும் சங்கிலியை அறுப்பதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை. யானை மட்டுமன்றி சிங்கம், புலி, குதிரை, காளை, நாய், என மனிதர்கள் வளர்க்கும் பழக்கும் எல்லா விலங்குகளுக்கும் இந்த நிலை பொருந்தும்.
குட்டியாக இருந்தபோது யானையின் மனதில் உண்டான ஒரு பதிவு, அந்த யானையை காலம் முழுமைக்கும் ஒரு பலவீனமான சங்கிலிக்கும், மனிதனுக்கும், அங்குசத்துக்கும் அடிமையாக வைத்திருக்கிறது. அதைப் போன்றே சிறுவயதில் உண்டான பழக்க வழக்கங்களும், மனப் பதிவுகளும் மனிதர்களை தங்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கு அடிமையாக வைத்திருக்கிறது.
ஒரு சில தோல்விகளும் ஏமாற்றங்களும் சிலரை எந்த புதிய முயற்சியும் செய்யவிடாமல்; மனதை தரள செய்து, அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கு அவர்களை அடிமையாக்குகின்றன. அந்த அனுபவங்களையும் பதிவுகளையும் தாண்டி வருபவர்கள் மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
Leave feedback about this