மனமும் இளமை பருவமும். மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.
மின்சார விளக்கு மட்டுமின்றி ஆயிரக் கணக்கான சாதனங்களைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவரின் ஆசிரியர் ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்து உன் தாயாரிடம் கொடு என்று கூறினார்.
அந்த கடிதத்தைப் பெற்று படித்துப் பார்த்த எடிசனின் தாயார் வருத்தத்துடன் கதறி அழுதார். தாயின் அழுகைக்குக் காரணம் தெரியாமல் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் எடிசன். எடிசனின் பார்வைக்குப் பதில் சொல்லும் விதமாக “உன்னை இனிமேல் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டாம் என்று உன் ஆசிரியை எழுதி இருக்கிறார் என்று கூறினார்” அவரின் தாய்.
ஏன் என்று எடிசன் கேட்டபொழுது சற்று சுதாரித்துக் கொண்ட அவரின் தாயார் கூறினார் “நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய், உனது திறமைக்கும் அறிவுக்கும் ஈடுகொடுக்க உன் ஆசிரியையால் முடியவில்லையாம்; அதனால் உன்னை வீட்டிலேயே இருந்து பாடம் படிக்கும் படி கூறி இருக்கிறார்” என்று அவரிடம் கூறினார்.
அன்று முதல் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அவரின் தாயே எழுதப்படிக்க மற்றும் மற்ற பாடங்களை கற்றுத் தர ஆரம்பித்தார். அவர் ஊரில் இருந்த நூலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று பல்வகையான நூல்களை வாசிக்கும் பழக்கத்தை எடிசனுக்கு உருவாக்கினார். அந்த சின்னஞ்சிறு சிறுவன், தன் தாயின் தூண்டுதலால் சுயமாகவே படித்து கண்டுபிடிப்பாளராகவும், தொழில் அதிபராகவும், உலகமே வியக்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்.
எடிசனின் தாயாரின் மறைவிற்கு பிறகுதான் எடிசனின் ஆசிரியர் எழுதிய கடிதம் அவர் கைக்குக் கிடைத்தது. அதில் அவர் ஆசிரியர் “உன் மகனுக்கு மூளை வளர்ச்சி போதவில்லை, நான் கற்றுத் தரும் பாடமும் அவனுக்குப் புரியவில்லை; அதனால் இனிமேல் அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கடிதமும் அதிலிருந்த விஷயங்களும் சிறுவனான தாமஸ் ஆல்வா எடிசனுக்கு கிடைத்திருந்தால், சொல்லப்பட்டிருந்தால், நிச்சயமாக அவனால் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டி இருக்க முடியாது.
எதிர்மறையான விஷயங்கள் என் மகன் காதில் கேட்டு விடக்கூடாது, அவன் மனதில் பதிந்து விடக்கூடாது என்ற எடிசனின் தாயாரின் எச்சரிக்கை உணர்வுதான் எடிசனை இந்த உயரத்துக்கு உயர்த்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்ற விஞ்ஞானியாகவும் வியாபாரியாகவும் வெற்றி பெறச் செய்தது.
நீ ஒரு திறமைசாலி, உன்னால் முடியும் என்று எடிசனின் தாயார் அவரை நம்ப வைத்ததால் தான் அவரால் இந்த உயரத்தை எட்டிப்பிடிக்க முடிந்தது. குழந்தைகளின் மனதைப் புரிந்துக் கொள்ளாமல் பல பெற்றோர்களும், ஆசிரியர்களும், அரசாங்கங்களும் அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.
இளம் வயதிலேயே வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் உன்னால் முடியாது, உனக்குத் தெரியாது, நீ ஒரு முட்டாள் என்று நம்ப வைக்கப்படும், மீண்டும் மீண்டும் கூறப்படும் சிறுவர் சிறுமிகளின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
Leave feedback about this