மனம்தான் மனிதனுக்கு வழிகாட்டி. மனிதனுக்கு இருப்பது ஒரு மனம்தான், ஆனால் அந்த மனம் செயல்படும் நிலைகளையும், தன்மைகளையும், வைத்து அதை புறமனம், நடுமனம், மற்றும் ஆழ்மனம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். புறமனம் என்பது நம்மோடு அனுதினமும் பேசிக்கொண்டும் சில நேரங்களில் உளறிக் கொண்டும் இருக்கும் பகுதி. நடு மனமானது ஒரே விசயத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டும், நினைத்துப் பார்த்துக் கொண்டும் இருக்கும் பகுதி. ஆழ்மனமானது தெய்வீகத் தன்மை உடையது, அது அமைதியாகவே இருந்து முக்கியமான மற்றும் அவசர நேரங்களில் மட்டும் நம்முடன் தொடர்பு கொள்ளும் பகுதி.
புறமனம் தனது ஆசைகளையும் கட்டளைகளையும் மாற்றிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு ஒரு பழம் வாங்க வேண்டும் என்று ஆசை தோன்றினால் வெளி மனமானது ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, என்று பார்க்கும் பழங்களின் மீதெல்லாம் ஆசை கொள்ளும், அதை வாங்கத் தூண்டும்.
அதே நேரத்தில் நடுமனம் செயல்பட்டால். ஏதாவது ஒரு பழத்தைக் குறிப்பிட்டு அதை வாங்கத் தூண்டும். மீண்டும் மீண்டும் அந்தப் பழத்தின் நன்மைகளையும், தேவைகளையும் குறிப்பிட்டு, அதன் நினைவையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும். ஒரே பழத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துமே ஒழிய மாற்றி மாற்றி பல பழங்களின் மீது ஆசையை உருவாக்காது.
அதே வேளையில் ஆழ்மனம் செயல்பட்டால், நம் உடலுக்கு நன்மையான, தேவையான, ஒரே ஒரு பழத்தின் பெயரை உச்சரிக்கும், அல்லது அந்தப் பழத்தின் காட்சியை மனதில் உருவாக்கும் அவ்வளவுதான். ஆழ்மனமானது ஒரே ஒருமுறை சொல்லும் அல்லது ஒரே ஒருமுறை காட்சியாகக் காட்டும், அதற்கு மேல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தாது. ஆழ்மனம் பேசும்போது நாம் தெளிவுடன் கவனிக்காமல் விட்டு விட்டால், மிக முக்கியமான நன்மையான விசயங்களை நாம் இழந்துவிட நேரிடும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் ஆபத்தான நேரங்களிலும் ஆழ்மனம் அவர்களுக்கு அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர தீர்வுகளைக் கொடுக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான சூழ்நிலைகளில் ஆழ்மனதின் கட்டளைகளையும் பரிந்துரைகளையும் கவனிக்கத் தவறுகிறார்கள். சிலர் புறமனதில் உருவாகும் எண்ணங்களை வைத்து கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார் என்பதைப் போல் கற்பனை செய்துகொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். புறமனம், நடுமனம், மற்றும் ஆழ் மனதின் செயல்பாடுகளைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டால், நாம் பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.
உதாரணத்திற்கு நேற்று நான் மோட்டார் சைக்கிளில் ஒரு ஊருக்கு சென்றிருந்தேன். நான் தலைக்கவசம் அணியவில்லை என்னிடம் மோட்டார் லைசென்சும் கிடையாது. அந்த ஊரில் நான் காண சென்ற நபர் இல்லை, வெகுதூரம் வந்துவிட்டோம் மோட்டார் சைக்கிளில் வேறு எங்காவது செல்லலாம் என்று ஆசைப்பட்டு பக்கத்து ஊருக்குச் செல்ல முடிவு செய்தேன்.
பக்கத்து ஊருக்குச் செல்லலாம் என்று அந்த ஊரின் பெயரை நினைத்த உடனேயே என் மனக்காட்சியில் சில காவல்துறை அதிகாரிகள் அந்த ஊரின் எல்லையில் நிற்பதைக் கண்டேன். மனக்காட்சியில் அதை நான் பார்த்த பிறகும் அந்த ஊருக்குச் சென்றேன். ஆனால் மனதில் அந்த காட்சி தோன்றிவிட்டதால் முன்னெச்சரிக்கையாக போலீஸ்காரர்கள் நிற்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே சென்றேன். சில மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே போலீஸ் அதிகாரிகள் நிற்பதைக் கவனித்து விட்டு மோட்டார் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு என் ஊருக்கே திரும்பிவிட்டேன்.
பக்கத்து ஊருக்குச் செல்லலாம் என்ற ஆசையைத் தூண்டியது எனது புறமனம். அந்த ஊர் எல்லையில் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்தது எனது ஆழ்மனம். அன்று ஆழ்மனதைக் கவனித்ததால் ஒரு சிக்கலில் இருந்து தப்பித்து விட்டேன். என் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் வழிகாட்டுதலின்படி பல பிரச்சனைகளிலிருந்து தப்பித்து இருக்கிறேன். அதைப்போலவே எனக்குத் தெரியாதா என்ற அகம்பாவத்தினால், ஆழ்மனதின் வழிகாட்டுதலை உதாசீனப்படுத்திவிட்டு பல சிக்கல்களிலும் மன வேதனைகளிலும் சிக்கி இருக்கிறேன்.
Leave feedback about this