தியானத்தில் மனம் வெளிப்படுத்தும் ரகசியங்கள். மனதுடன் பேசுவதற்கும், மனதிடம் இருந்து இரகசியங்களையும், தகவல்களையும் அறிந்துக் கொள்வதற்கும் ஒரு எளிய வழிமுறை உள்ளது.
மனிதர்களின் இடையூறும், அதிக சப்தங்களும் இல்லாத அமைதியான இடத்தில் தளர்வாக அமர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த தியான முத்திரையைப் பயன்படுத்துங்கள். தியானத்தில் அமைதியாக அமர்ந்து, உங்களை கவனிக்கத் தொடங்குங்கள்.
உங்கள் சுவாசத்தைக் கவனியுங்கள். உங்கள் மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள் செல்கிறது என்பதைக் கவனியுங்கள். உடலின் உள்ளே அந்தக் காற்று எங்கெல்லாம் பிரயாணம் செய்கிறது என்பதைக் கவனியுங்கள். அந்த மூச்சுக் காற்று எவ்வாறு உள்ளே செல்கிறது, எங்கெல்லாம் பயணப்பட்டு பின்பு எவ்வாறு உடலை விட்டு வெளியேறுகிறது என்பதைக் கவனியுங்கள்.
எந்த கற்பனையும் செய்ய வேண்டாம், மந்திரங்களை ஜெபிக்க வேண்டாம், எந்த வார்த்தையையும் உச்சரிப்பு வேண்டாம், அமைதியாக இருந்தால் போதும். சிறிது நேரத்தில் மனம் அமைதி அடையும்.
அமைதி அடைந்த சாந்தமான மனம் உங்களிடம் தன் கவலைகளை வெளிப்படுத்தலாம், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரலாம், நடக்கப் போகின்ற விஷயங்களைத் தெரியப்படுத்தலாம், முன்னெச்சரிக்கையாக நடக்கவிருக்கும் தவறுகளைத் தெரியப்படுத்தலாம், புதிய அறிவு தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், உலகின் இரகசியங்களைக் கூட உங்களுக்கு அறிவிக்கலாம்.
எந்த விஷயமாக இருந்தாலும் மனம் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மட்டுமே இருங்கள் அதை கட்டுப்படுத்தவோ அல்லது அதற்குப் பதில் சொல்லவோ வேண்டாம். வெறும் பார்வையாளர்களைப் போல் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருங்கள்.
இந்த கவனிப்பு, இந்த ஒருமை, தொடர்ந்து இருந்தால்; உங்கள் மனம் சக்தி பெற்று பல அரிய தகவல்களையும், அமானுஷ்யமான விஷயங்களையும், இரகசியங்களையும், உங்களுக்கு வெளிப்படுத்தும். உங்கள் மனமே உங்களுக்கு வழிகாட்டும். சில கால தியானப் பயிற்சிகளுக்குப் பின்னர், உங்கள் மனம் சாதாரண விழிப்பு நிலையில் இருக்கும் போதே உங்களுடன் உரையாடும். உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும், உங்களுக்கு வழிகாட்டும்.
இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால். தியானத்திலோ, அல்லது பொதுவிலோ மன இச்சை என்று அழைக்கப்படும், உங்களின் வெளி மனமே உங்களிடம் முதலில் பேசும். அது உங்களுக்கு எந்த நன்மையையும் தராது. அது தனது கற்பனைகள், ஆசைகள், வக்கிரங்கள், மற்றும் மனப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்.
உன்னிப்பாக மனதின் வார்த்தைகளைக் கவனிக்கப் பழகினால், எளிதாக வித்தியாசப்படுத்தி புரிந்துகொள்ளலாம்.