மனம் உருவாக்கும் தடைகள். பெரும்பாலும் மனிதர்களின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தடையாக இருப்பது அவர்களின் மனமாகத்தான் இருக்கிறது. சிறுவயதில் நடந்த சம்பவங்களும், குடும்பத்தில் கற்றுக்கொண்ட பழக்கங்களும், என்றோ அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும், என்றோ அவர் எதிர்கொண்ட தோல்விகளும், யாரோ சொன்ன கருத்துக்களும், அவர் மனதில் பதிவாக இருந்துகொண்டு; புதிய முயற்சிகள் எதையும் செய்யவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது.
மனதையும் மீறி அவர்கள் ஏதாவது புதிய முயற்சிகள் செய்தாலும், மனம் புதிய தடைகளையும் தடங்கல்களையும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. ஒருவர் மனதில் இருக்கும் முன்முடிவுகளும், பதிவுகளும், அவர்களின் முன்னேற்றத்தை பெருமளவு தடுத்துக் கொண்டிருக்கின்றன.
என்னால் முடியும், நான் செய்வேன், நான் வெற்றி பெறுவேன் போன்ற நேர்மறை வார்த்தைகளையும் வசனங்களையும் கூறிக்கொள்வதும்; நம்புவதும், சிந்தனையில் மட்டுமே பதியக் கூடிய விசயம்; மனதளவிலே எந்த பயனும் தராது. நம்பினால் நடக்கும், ஆசைப்பட்டால் நடக்கும், என்று கூறிக் கொள்வதெல்லாம், நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விசயங்களை ஒழிய, அவற்றால் பெரிய நன்மை கிடையாது. நேர்மறை வார்த்தைகளைக் கூறும்போதே, இவனுக்கு உறுதியில்லை என்று மனம் முடிவு செய்துவிடும். நம்மைப் பற்றி மனதுக்கு நன்றாகவே தெரியும் அல்லவா.
ஒருவருக்கு உண்மையான நம்பிக்கையும் மனத் தைரியமும் உருவாக்க வேண்டுமென்றால், அவர் தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவரின் உழைப்பையும் முயற்சிகளையும் பார்த்துத்தான் மனம் ஒரு காரியம் வெற்றி அடையும் என்று நம்பத் தொடங்கும். மனம் நம்பிக்கை கொண்ட பிறகுதான், அந்த நபருக்கு மனம் உற்சாகமளித்து உதவிகள் புரியும், வழிகாட்டத் தொடங்கும்.
Leave feedback about this