மனம் எதையும் மறப்பதில்லை. மனதின் நினைவாற்றலைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பொருள் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை, காலப் போக்கில் அதை மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து அந்த பொருள் பரிசாகவோ, இனாமாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள் – உறவினர்கள் மூலமாகவோ, உங்களுக்குக் கிடைக்கலாம்; அல்லது ஏதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த பொருளை அடையும் வாய்ப்பும், வசதியும் உங்களிடம் இருக்கலாம்.
இதைப் போன்ற நிகழ்வுகள் பலருக்கு பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக நடந்திருக்கலாம். பல வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ஆசைப்பட்டு, கிடைக்காமல் உங்கள் நினைவிலிருந்து மறைந்து போன ஒரு விசயத்தை இப்போதும் உங்கள் மனமானது நினைவில் வைத்திருக்கும். இப்போதும் உங்கள் மனம் அதைத் தேடிக்கொண்டிருக்கும், வாய்ப்புகள் அமையும் போது உங்களுக்கும் அந்த பொருளுக்கும் அல்லது விசயத்துக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும்.
பொருட்கள் மட்டுமின்றி, போக விரும்பும் இடங்கள், சந்திக்க விரும்பும் மனிதர்கள், அடையத் துடிக்கும் வெற்றிகள், என அனைத்து விசயங்களையும் மனம் பதிவு செய்து, அதற்கான முயற்சியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது, அதனால் மனதின் இயக்கம் நமக்கு விளங்குவதில்லை.
உண்மையில் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றை, அல்லது உண்மையாக நீங்கள் நேசித்த ஒன்றை, நீங்கள் அடைய முடியாமல் போனாலும். மனம் அதை மறக்காமல் நினைவில் வைத்திருந்து அதை அடையும் வழிகளைத் தேடிக்கொண்டே இருக்கும். மனதில் சரியான பதிவு உருவாகிவிட்டால், உங்கள் தேவையை, ஆசையை நிறைவேற்றும் பொறுப்பை மனம் எடுத்துக்கொண்டு இயங்க தொடங்கும். உங்கள் தேவை நிறைவேறும் வரையில் நெஞ்சம் மறப்பதில்லை.
1 Comment