மனம் எனும் அட்சய பாத்திரம். அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையில் வருவதைப் போன்று நீங்கள் விரும்பும் அனைத்தையும் உங்களுக்குக் கொடுக்கக் கூடிய ஒரு பூதம் உங்களுடனே இருந்தால் எப்படி இருக்கும்? புராணக் கதையில் வருவதைப்போன்று உங்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யக்கூடிய அட்சய பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?
மனதின் இயல்புகள் மற்றும் குணாதிசயங்களை விளக்கக்கூடிய பல புராணக் கதைகள் உள்ளன. எழுத்து வடிவங்கள் தோன்றாத காலம் தொட்டு பல இரகசியங்களை, பல அபூர்வத் தகவல்களை கதை வடிவில் சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள். இன்று வரையில் அந்த கதைகள் கதைகளாக மட்டுமே நீடித்து நிற்கின்றன. அந்த கதைகளில் கூறப்படும் உயரிய கருத்துக்களையும் தத்துவங்களையும் புரிந்துகொள்ள பெரும்பாலும் யாரும் முயற்சி செய்வதில்லை.
கேட்பதையெல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு அலாவுதீன் பூதம், தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அட்சய பாத்திரம், மனதின் வடிவில் தன்னிடம் இருப்பதை பெரும்பாலான மனிதர்கள் உணர்வதே இல்லை. புராணக் கதைகளில் வரும் அனுமார், பீமன், அட்சய பாத்திரம், எண்ணியதை எண்ணியவாறு கொடுக்கும் கற்பக விருட்சம், வேதாளம், பூதம் போன்றவை மனதின் ஆற்றலையும் அதைப் பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் விளக்கும் தத்துவங்களாகும்.
மனதின் ஆற்றல்
அட்சய பாத்திரத்தின் இயல்பால், அதனுள்ளே சிறிய அளவில் இடப்படும் பொருள் பன்மடங்காக பல்கிப் பெருகி வெளிவரும். நல்லதோ, தீயதோ தனக்குள் எது இடப்பட்டாலும் அதை பல்கிப் பெருக்கும் அட்சய பாத்திரத்தின் இயல்பு மனதிடமும் இருக்கிறது. மனமானது தனக்கு உள்ளே பதியப்படும் பதிவுகளையும் அனுபவங்களையும் பல்கிப் பெருக்கி சிந்தனையாக, குணமாக, செயலாக வெளிப்படுத்துகிறது.
ஐம்பொறிகளின் அனுபவங்களால் உண்டாகும் மனப் பதிவுகள் கால ஓட்டத்தில் பல்கிப் பெருகி அந்த பதிவுகளின் விளைவுகளை வெளிப்படுத்தும். கண்களால் காணப்படுவையும், செவிகளால் கேட்கப்படுபவையும், நாசியால் நுகரப் படுபவையும், நாவால் சுவைக்கப்படுபவையும், உணர்ச்சிகளால் உணரப்படுபவையும், அனைத்தும் மனதில் பதிவாகி பின் இயல்பாக, குணமாக, எண்ணமாக, வார்த்தைகளாக, செயல்களாக வெளிப்படுகின்றன.
உங்கள் அட்சய பாத்திரம் எதை வெளிப்படுத்தப் போகிறது?
உங்களின் முயற்சிகளுக்கும் உழைப்புக்கும் உங்கள் மனம் எவ்வாறு ஒத்துழைப்பைத் தரப் போகிறது என்பது, மனதுக்குள் நீங்கள் எவற்றைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். மனம் எனும் அட்சய பாத்திரத்தின் உள்ளே சிறு வயது முதலாக எவற்றை இட்டு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அந்த பாத்திரத்தின் உதவியும், ஒத்துழைப்பும், அதன் வெளிப்பாடும் இருக்கும்.
இன்று உங்கள் வாழ்க்கையாக இருப்பது இளமைக் காலம் முதலாக நீங்கள் மனம் எனும் அட்சய பாத்திரத்தின் உள்ளே இட்டவைகளின் வெளிப்பாடுகள். இன்று என்ன பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள், வாசிக்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள், அனுபவிக்கிறீர்கள், என்பதை பொறுத்துதான் எதிர்கால வாழ்க்கை அமையும்.
Leave feedback about this