மனம்

மனம் என்பது மூளையா?

மனம் என்பது மூளையா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் மனதையும் மூளையையும் மைண்ட் (mind) என்று அழைப்பதற்குக் காரணம் இவை இரண்டுக்கும் சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. மனம் மூளையில் இல்லை ஆனால் மனம் என்னும் எண்ணங்களையும், மனம் இடும் கட்டளைகளையும், நிறைவேற்றும் வேலையை மூளைச் செய்வதால் மைண்ட் என்று மூளையைக் குறிப்பிடுகிறார்கள். மனதில் ஒரு எண்ணமோ தேவையோ தோன்றும்போது மூளையிடம் கட்டளையிடுகிறது, மூளை அந்த கட்டளைகளை நிறைவேற்றுகிறது.

இதயத்தை மனம் என்றும் சிலர் குறிப்பிடுவார்கள், இதற்குக் காரணம் இதயம் மனதின் தொடர்பு பாலமாக செயல்படுகிறது. மனதில் உருவாகும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு இதயத்தில் தெரிகிறது. இதயத்தின் துடிப்பு மாறுவது, இதயம் படபடப்பது, கனப்பது, வெறுமையாக உணர்வது, போன்ற உணர்வுகள் மனதினுள் உருவாகும் மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன.

மனம் எங்கு இருக்கிறது என்று கேட்டால், அது மனிதனின் உடலைச் சுற்றிலும் ஒரு போர்வையைப் போன்று அமைந்திருக்கிறது. மனிதன் சிந்தனை செய்யும் போது மனமானது, உடலிலிருந்து பரவி சிந்தனை செய்யப்படும் நபர், இடம், பொருள், வரையில் பரவுகிறது.

மனம் உடலைச் சுற்றியும் இருக்கிறது, செயல்புரிகிறது என்பதை எவ்வாறு கண்டறிவது? பெண்கள் மென்மையானவர்கள், அவர்களின் மனம் ஆண்களை விடவும் கூர்மையாக இயங்கும். பக்கத்து அறையில் உறங்கும் குழந்தை விழித்துக் கொண்டால் அதன் தாயால் அதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அவளின் மனம் அந்த குழந்தை உறங்கும் இடம் வரையில் படர்ந்திருக்கிறது. வெளியில் சென்ற கணவனோ, குழந்தையோ, வீடு திரும்பும் போதும், வீட்டின் வாசலில் யாராவது நிற்கும் போதும், வீட்டின் உள்ளே இருந்தே ஒரு பெண்ணால் அதனை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. அவளின் மனம் அந்த வீடு முழுவதும் பரவியிருக்கிறது.

பொது இடத்தில் யாராவது தன்னை பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பெண்ணால் அதனை சுலபமாக உணர்ந்துக் கொள்ள முடிகிறது. தன் முதுகுக்குப் பின்புறம் இருந்து ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு பெண்ணால் அதனை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. பெரும்பாலான பெண்களுக்கு தன்னை பார்ப்பவர்கள் என்ன நோக்கத்துடன் பார்க்கிறார்கள் என்பதைக் கூட புரிந்துக் கொள்ள முடிகிறது.

அண்மைக் காலத்தில் சிலப் பெண்களுக்கு உணர்வுகள் மங்கிவிட்டன. அவர்களால் பார்த்து, கேட்டு, அல்லது தொட்டு தான் ஒரு விசயத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த நிலைக்குக் காரணம் அவர்களின் மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இல்லை.

மனம் மட்டும் தன் முழு ஆற்றலுடன் இயங்கினால், ஐம்பொறிகள் மூலம் அறிந்துக் கொள்ளும் அத்தனை விடயங்களையும் மனதைக் கொண்டே அறிந்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *