மனம் என்பது என்ன? உணர்தல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது மனிதர்களின் ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து அறிவுகளும், மற்ற உயிரினங்களுக்கும் ஒன்று முதல் ஐந்து வரையில், சில மாறுபட்ட விகிதாச்சாரங்களில் வழங்கப்பட்டிருக்கின்றன.
மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவான மனம் வழங்கப்பட்டிருக்கிறது. சில விலங்குகளுக்கு மனம் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றுக்கு சிறிய நினைவாற்றலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் அறிவும் இருக்கும் ஆனால் சிந்தனை ஆற்றல் இருப்பதில்லை. விலங்குகளின் மனம் மனிதர்களின் மனதைப் போன்று முழு ஆற்றலுடன் இயங்குவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களின் மனதைப் போன்று அனைத்து விசயங்களையும் பதிவு செய்துகொள்வதும் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக இயங்குகிறது. அதனால் விலங்குகளுக்கு இருக்கும் தன்மையை மனம் என்று குறிப்பிட முடியாது.
குழந்தைகள் இந்த மண்ணில் பிறக்கும் போது அவர்களுக்கு மனம் இருப்பதில்லை. மனம் உருவாவதற்கு முன்பாகவே குழந்தைகளுக்கு புத்தி இருக்கும். புத்தி என்பதும் மனம் சார்ந்த விசயமல்ல. அதாவது யார் தனது தாய் என்ற அறிவு, பாலை அருந்தும் அறிவு, மூச்சுவிடுவது, மலம் கழிப்பது, தனது உடல் உறுப்புகளைப் பயன்படுத்துவது, போன்ற அடிப்படை அறிவுகள் குழந்தைகள் பிறக்கும்போதே உடன் பிறந்துவிடுகின்றன.
மனம் என்பது உடலில் ஒரு உறுப்பல்ல, மாறாக அது ஒரு உணர்வு. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக யாராலும் பார்க்கவோ, தொடவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது. மனம் உயிரைப் போன்று சூட்சும நிலையில் செயல்படுகிறது.
Leave feedback about this