மன அழுத்தம் உருவாகக் காரணங்கள். மன அழுத்தம் என்பது ஒரு மனிதனின் திறமைக்கும், சக்திக்கும், மீறிய ஒன்றை செயல்படுத்த முயன்று, அதை அடைய முடியாத போது உருவாகும் ஏக்க உணர்வு என்று சொல்லலாம். அடுத்தவர்கள் என்னைத் தாழ்வாக நினைப்பார்கள், இளக்காரமாக நினைப்பார்கள் என்றும், என் திறமையை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும் என்றும், எதையாவது கற்பனை செய்துக் கொண்டு வாழ்க்கையோடு போராடுவதால் தான் மனதில் அழுத்தங்கள் உருவாகின்றன.
மன அழுத்தங்களுக்குக் காரணமாக, குடும்பச் சூழல், வேலைச் சூழல், மேலதிகாரியின் அழுத்தம், சமூக பிரச்சனைகள், சமுதாய அமைப்பு, லட்சியம், எதிர்காலம், என்று எதை முன் வைத்தாலும்; இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மையும், தன்னால் இயலாத ஒன்றைச் செய்ய நினைப்பதும்தான்.
யாரோ ஒருவர் பேசிய வார்த்தையாலும், செய்த செயலாலும், சிலருக்கு மன அழுத்தத்தை உருவாகலாம். யாரோ ஒரு நபரிடம் உள்ள திறமையோ, செல்வமோ, பொருளோ, தன்னிடம் இல்லை என்று சிலருக்கு மன அழுத்தம் உருவாகலாம். தன்னை வேறு ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
எந்த கோணத்தில் சிந்தித்தாலும் மன அழுத்தம் என்பது தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடும் போதும், தன்னால் இயலாத ஒன்றைச் செய்ய முயலும் போதும், மட்டுமே உருவாகிறது. உங்களால் முடியாது என்று நீங்கள் நம்பும் ஒன்றை, என்னால் முடியாது என்று வெளிப்படையாகத் தெரிவித்து விடுங்கள். முடியாத விசயங்களை முயற்சி செய்யாதீர்கள்.
பூனையும் புலியும் விலங்கினத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்ததாக இருந்தாலும், பூனை புலியாக மாற முயற்சிப்பதில்லை. நீங்கள் பூனை என்றால், நான் பூனைதான் என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் புலியாக இருந்தாலும் அதை மற்றவர்களிடம் நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். இவை இரண்டும் இல்லையென்றால் மன உளைச்சலுக்கு வேலையில்லை.