மலர் மருத்துவம் எனும் அருட்கொடையை உலக மக்களின் நலனுக்காக அருளிய Dr. எட்வர்ட் பாட்ச் அவர்கள், செப்டம்பர் 24, 1886 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் பிறந்தார்கள். தொழில் முறையில் அவர் ஒரு ஆங்கில மருத்துவராவார். பிற்காலத்தில் அவர் நுண்ணுயிர் ஆராய்ச்சியிலும், ஹோமியோபதி மருத்துவத்திலும் ஈடுபட்டார்.
புகழ் பெற்ற ஆங்கில மருத்துவராகவும் மனிதநேயமிக்க மருத்துவராகவும் திகழ்ந்த அவர், தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் நபர்கள் நோய்கள் முழுமையாகக் குணமாகாமல் மீண்டும் மீண்டும் பல்வேறு உடல் உபாதைகளுடன் தன்னை நாடி வருவதை உணர்ந்தார். நோயாளிகளுக்கு முழுமையாகவும் நிரந்தரமாகவும் ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய மருத்துவத்தைத் தேடி ஹோமியோபதி பயிலத் தொடங்கினார். பின்பு ஹோமியோபதி மருத்துவத்தின் நிறுவனர் சாமுவேல் ஹென்மேனைப் போன்று ஆங்கில மருத்துவத்தைத் துறந்து ஹோமியோபதி மருத்துவராக மாறினார்.
1917ஆம் ஆண்டு அவரின் 31 வயதில் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இன்னும் மூன்று மாதங்கள் தான் உயிருடன் இருப்பார் என்று ஆங்கில மருத்துவர்கள் ஆருடம் சொன்னார்கள் ஆனால் அவர் அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்து 50 வயது வரையில் வாழ்ந்தார்.
ஹோமியோபதி மருத்துவத்தின் மருந்துகளை நினைவு வைத்துக் கொள்வதும், அந்த மருந்துகளைக் கணக்கிட்டுப் பரிந்துரைப்பதும் சற்று கடினமாக இருந்ததால் அவர் இன்னும் எளிமையான மருத்துவ முறையை உருவாக்க முயன்றார்.
1930களில் காடுகளில் சுற்றித் திரிந்து ஹோமியோபதி மருத்துவத்தைப் போன்ற பக்கவிளைவுகள் இல்லாத, மேலும் எளிமையான மருத்துவத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். காடுகளில் ஆராய்ந்து அங்கிருந்த மரங்கள், மலர்கள், போன்றவற்றின் மருத்துவ குணங்களை அறிந்துகொண்டார்.
மலர்களில் தேங்கி நிற்கும் பனித்துளிகளில் மருத்துவ குணம் இருப்பதை உணர்ந்தார். மலர்களில் தேங்கும் பனித்துளிகளில் சூரிய ஒளி படும்போது, அந்த மலரில் இருக்கும் மருத்துவ குணங்கள் அந்த பனித்துளியில் படர்வதைக் கண்டுணர்ந்தார். பனித்துகளைச் சேமித்து மருந்தாகப் பயன்படுத்துவது கடினமான காரியம், அதே நேரத்தில் அவை அதிகமான நபர்களுக்குப் பயன்படுத்த போதாது; அதனால் அவர் பனித்துளியில் எவ்வாறு மருத்துவ குணம் உண்டாகிறது என்பதை ஆராய்ந்து அதே வழிமுறையில் சுயமாக நீரில் மலர்களை ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, மலர் மருந்துகளை உருவாக்கினார்.
மனிதனின் நோய்கள் அனைத்தும் மனதில் இருந்துதான் தொடங்குகின்றன என்பதை அறிந்து, மனதைச் சரிசெய்யக்கூடிய 38 வகையான மலர் மருந்துகளை உருவாக்கினார். 39வது மருந்து வகையாக (Rescue Remedy) ரெஸ்க்யூ ரெமெடி எனும் அவசரக் காலங்களில் உதவக்கூடிய மலர் மருந்துக் கலவையையும் உருவாக்கினார்.
1 Comment