மலச்சிக்கலும் அஜீரணமும் தான் மனிதனின் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது. எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாதவருக்கும் செரிமான கோளாறோ மலச்சிக்கலோ உண்டானால் போதும் அனைத்து நோய்களும் அழையா விருந்தாளியாக வந்து சேரும்.
இதைத்தான் திருவள்ளுவர் “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்” என்றார். இந்த குறளின் விளக்கம் “இதற்கு முன் வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்குத் தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலைப் பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது” என்பதாகும்.
மருந்து என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது இன்றைய மனிதர்கள் பயன்படுத்தும் இரசாயனத்திலிருந்து தயாரிக்கப்படும் ஆங்கில மருந்துகளை அல்ல. மனிதர்களுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காத மூலிகைகளைத் தான் அவர் குறிப்பிடுகிறார். உண்ட உணவு ஜீரணித்து, பசி உண்டான பிறகு உணவை உட்கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது அதனால் எந்த மருந்தும் தேவைப்படாது என்கிறார் திருவள்ளுவர்.
உட்கொண்ட உணவு உடலின் உள்ளே என்ன செய்கிறது என்பதைச் சற்று பார்ப்போம்.
ஒரு மனிதனின் உடலில் சத்துக்கள் குறையும் போது, புதிய சத்துக்களை உற்பத்தி செய்வதற்காக உடல் பசி என்ற உணர்வை உண்டாக்கி உணவைக் கேட்கும். பசி உண்டான பின்னர் உட்கொண்ட உணவை ஜீரணிப்பதற்குத் தேவையான சுரப்பிகள் முழுமையாகச் சுரக்கத் தொடங்கும். பசி உருவாகி, தேவையான சுரப்பிகள் எல்லாம் சுரந்த பின்னர், உணவை முறையாக மென்று உமிழ்நீர் கலந்து விழுங்கும் போது, உண்ட உணவு முழுதாக செரித்து உடலுக்குத் தேவையான முழு சத்தாக மாறும். செரிமானத்துக்குப் பின்னர் உணவின் கழிவுகளும் தேங்காமல் முழுமையாக உடலை விட்டு வெளியேறும். இதுதான் உட்கொள்ளும் உணவின் ஜீரண சுழற்சி.
செரிமானம் முறையாக நடைபெறும் பட்சத்தில், உடலுக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். கழிவுகளும் உடலில் தேங்காமல் எளிதாக வெளியேறும். கழிவுகள் இல்லாத உடலில் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும் போது உடல் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்கும். இறுதிவரையில் எந்த நோயும் உண்டாகாது.
Leave feedback about this