நோய்கள்

மலச்சிக்கல் உருவாக காரணங்களும் அவற்றுக்கான தீர்வுகளும்

மலச்சிக்கல் உருவாக காரணங்களும் அவற்றுக்கான தீர்வுகளும். வாய்வழியாக வயிற்றின் உள்ளே செல்லும் அனைத்து உணவுகளும் முழுமையாக ஜீரணமாகி, சத்துக்களைப் பிரித்து எடுத்துக் கொண்ட பிறகு மீதம் இருப்பவற்றை கழிவாக உடல் வெளியேற்றிவிட வேண்டும்; இது இயற்கையின் நியதி. ஆனால் பலருக்கு இந்த சுழற்சி முறையாக நடைபெறுவதில்லை. “அஜீரணமும், மலச்சிக்கலும், சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள்” என்று நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். செரிமானக் குறைபாடுகள் தான் மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும், எல்லாத் தொந்தரவுகளுக்கும் முதன்மை காரணமாக இருக்கிறது, அடுத்ததாக மலச்சிக்கல்.

மலம் கழிப்பதில் சிக்கல் உண்டாகி, முறையாக மலம் கழிக்க முடியாமல் பலர் அவதியுறுகின்றனர். மலச்சிக்கலில் பல வகைகள் உண்டு. சிலருக்கு “எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது, ஆனால் கண்ட நேரத்தில் வரும், வந்தாலும் தடுக்க முடியாது வராவிட்டாலும் ஏன் என்று கேட்க முடியாது”. சிலருக்கு “வரும் ஆனால் வராது”. சிலருக்கு “வந்துடு வந்துடு தானா வந்துடு என்று கெஞ்ச வேண்டியது வரும்”. சிலருக்கு “ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் வரும்”.

என்னிடம் வைத்தியத்துக்கு வந்த ஒருவருக்கு ஐந்து நாட்களுக்கு ஒருதரம் தான் மலம் வெளியேறுமாம். சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும். சிலருக்கு உணவு உட்கொள்வதற்கு முன்பாக மலம் கழிக்க வேண்டிய உணர்வு உண்டாகும். இன்னும் பல வகையான மலச்சிக்கல்கள் உள்ளன.

உடலின் உள்ளே நாம் அனுப்பும் உணவுகளின் கழிவுகள் வெளியேற முடியாத போது, கழிவுகள் உடலின் உள்ளேயே தேங்கிவிடுகின்றன. இப்படி உடலில் தேங்கும் கழிவுகள், தேங்கும் உறுப்புகளில் தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன.

மலச்சிக்கல் உருவாகக் காரணம் காரணம்?

மலம் கழிப்பதில் தொந்தரவுகள் உண்டாவதற்கு முதல் முக்கிய காரணம், செரிமானக் கோளாறுதான். செரிமானம் சீர்கேடு அடைய முதல் முக்கியமான காரணம், பசியின்றி உணவை உட்கொள்வது தான். செரிமானம் முறையாக நடக்காதது ஏன் என்பதை முந்தைய கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன், அதை வாசித்துப் பாருங்கள்.

மலச்சிக்கல் உருவாகக் காரணமாக இருக்கும் விசயங்கள்

1. அதிகக் காரமுள்ள உணவுகளை உட்கொள்வது.
2. இரவில் தாமதமாக சாப்பிடுவது.
3. இரவு நேரங்களில் விழித்திருப்பது, தாமதமாக உறங்கச் செல்வது.
4. இரவில் வேலை செய்வது.
5. இரவில் அதிகக் குளிர்ச்சியுடைய அறையில் உறங்குவது.
6. மனம் நிம்மதியற்று இருப்பது.
7. காலையில் தாமதமாக எழுந்திருப்பது.
8. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.
9. உடலின் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவது.
10. உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை உட்கொள்வது.

இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மலச்சிக்கலுக்கான தீர்வுகளைப் பார்ப்போம்.

மலச்சிக்கலை குணப்படுத்தும் வழிமுறைகள்

1. பசியின்றி சாப்பிட வேண்டாம். கடிகார நேரத்தைப் பின்பற்றாமல், நன்றாக பசி உண்டானால் மட்டும் சாப்பிடுங்கள்.

2. உணவை நன்றாக மென்று, ரசித்து, ருசித்து, அமைதியாக சாப்பிடுங்கள்.

3. தண்ணீரை அளவோடு அருந்துங்கள், தாகமின்றி தண்ணீர் அருந்த வேண்டாம்.

4. இரசாயனங்கள் கலந்த, உணவுகள், பானங்கள், மற்றும் மருந்துகளைத் தவிர்த்துவிடுங்கள்.

5. இரவில் சமைத்த உணவைச் சாப்பிடாமல் பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.

6. இரவில் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டானால் மாலை 7 மணிக்குள் சாப்பிட்டு விடுங்கள்.

7. இரவில் 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள்.

8. மைதா மாவில் இருந்து தயார் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

9. பாக்கெட் பாலை ஒதுக்கி. நெய், மோர், தயிர், வெண்ணெய் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.

10. காலையில் விரைவாக எழுந்து விடுங்கள்.

11. வேலைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக எழுந்து விடுங்கள்.

12. தினம் 5 நிமிடமாவது மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்.

13. தினம் எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள்.

14. மனதை, பயம், கவலை, துக்கம், ஏக்கம், கர்வமின்றி, அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் செய்ய வேண்டிய விசயங்கள்

1. காலையில் 2 கப் வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துங்கள், அருந்தி குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து, கழிப்பறைக்குச் செல்லுங்கள்.

2. கழிப்பறையில் சென்று அவசரப்படாதீர்கள், அமைதியாக அமர்ந்திருங்கள் அது தானாக வெளியேறும்.

3. முக்குவது, வயிற்றை அமுக்குவது, அவசரப்படுவது, என்று எதையும் செய்யாதீர்கள். அது தானாக தான் வெளியேறும், நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

4. பொறுமையாகக் காத்திருந்தால் கண்டிப்பாக மலம் வெளியேறும், ஓரிரு நாட்களுக்கு வராவிட்டாலும், அடுத்த நாள் நிச்சயம் வெளியேறும்.

5. கழிப்பறைக்கு செல்லும் நேரத்தை, ஒரே நேரமாக, ஒரே இடமாக வைத்துக் கொண்டால், உடல் சுலபமாக பழகிவிடும். உடல் பழகிவிட்டால் அந்த நேரம், இடம் வந்ததும் மலம் கழிக்கத் தோன்றும்.

6. மலம் கழிக்க வேண்டி எந்த மருந்து மாத்திரையும் உட்கொள்ளாதீர்கள். உடல் மாத்திரைக்குப் பழகிவிட்டால், பின்பு மாத்திரை இல்லாமல் மலம் வெளியேறாது.

7. என்னால் சரியாக மலம் கழிக்க முடியவில்லை, என்பதைப் போன்ற பயத்தை மனதில் விதைக்காதீர்கள், வயிற்றின் உள்ளே சென்ற அனைத்தும் வெளியேறியே தீரும்.

8. அது எப்ப வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய சூழ்நிலையை உருவாக்கினால் கண்டிப்பாக வரும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field