வாழ்க்கை

லியோ டால்ஸ்டாயின் “வாழ்க்கை”

லியோ டால்ஸ்டாயின் “வாழ்க்கை” என்ற மொழி பெயர்ப்பு நூலிலிருந்து என்னை கவர்ந்த சில வரிகள்.

அவன் மற்றவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்கிறான் என்றால், அவைகளும் அவனுடைய சொந்த நன்மைக்காகத்தான்.

‘நன்மையை அடைவதற்காக அடக்கமும் பணிவும் கொள்ளும் மார்க்கமே வாழ்க்கை’ என்று லாவோத்ஸே[3] அருளியுள்ளார். இவரும் கன்பூஷியஸ் காலத்தவர். ​ ‘மனிதன் இறைவனுடைய விதியைப் பின்பற்றி நன்மையடைவதற்காக இறைவன் அவன் நாசித் துவாரங்களின் வழியாக ஊதியுள்ளதே வாழ்க்கை’ என்று யூத முனிவர் கூறினர்.

இத்தகைய போலிப் போதகர்கள் எப்போதும் இருந்து வந்ததுபோல், இக்காலத்திலும் இருக்கிறனர். இவர்கள் இரு பிரிவினராக உள்ளனர். ஒரு கூட்டத்தார், மனித சமூகத்திற்கு வழிகாட்டிய மேதைகளின் போதனையைப் பெயரளவில் ஒப்புக் கொண்டு, அதன் கருத்தைக் கைவிட்டு விட்டனர். ஆன்றோருடைய போதனை நேரடியாகத் தெய்வத்திடமிருந்து வந்ததென்றும், மரணத்தின் பின்னால் ஏற்படக்கூடிய எதிர்கால வாழ்வைப் பற்றியே அது விளக்குவதென்றும் இவர்கள் மக்களுக்கு உபதேசித்து வரலாயினர். நாளடைவில் மத சம்பந்தமான சடங்குகளையும், வெளி ஆசாரங்களையுமே மக்கள் நிறைவேற்றி வரும்படி இவர்கள் கட்டாயப்படுத்தி வந்தனர். வாழ்க்கை ஆராய்ச்சி அறிவுக்குப் பொருத்தமில்லாதது என்பது இவர்கள் கொள்கை. மறு உலகில் கிடைக்கப் போகும் மகா உன்னதமான வாழ்க்கையை நம்புவதாலேயே இகவாழ்வு திருந்திவிடும் என்று இவர்கள் போதிக்கின்றனர்.

முதலாவது கூட்டத்தார், செத்த பிறகு ஏற்படும் எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டி, மெய்யறிவுக்குரிய போதனைகளை ஒழித்துக் கட்டுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார், இந்தப் போதனைகள் எல்லாம் பழங்கால அறியாமையால் விளைந்த பழக்கங்களின் சின்னங்கள் என்றும், மனிதனின் உடல் வாழ்வு தவிர வாழ்க்கையைப் பற்றி வேறு கேள்விகளை எழுப்பாமலிருப்பதே சமூக முன்னேற்றப் பாதை என்றும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றனர்.

இக் காலத்தில் மக்கள் பின்பற்றும் சமயங்கள் ஆயிரமல்ல, மூன்றுதாம் என்பது அவர்களுக்குப் புலனாவதில்லை. சீன மதம், இந்திய மதம், யூத-கிறிஸ்தவம் (இதன் கிளை இஸ்லாம்) என்பவையே அந்த மூன்று சமயங்கள்.

கண்களில் பார்வையுள்ளவர்கள் தம் முன்னால் காண்பவைகளை அறிந்து விளக்கிச் சொல்லுவார்கள். ஆனால் குருடனோ, கையிலுள்ள தன் கழியால் தட்டிப் பார்த்துக்கொண்டே நடக்கிறான்; கழியில் தட்டுப் பட்ட பொருள்களைத் தவிர வேறு எதுவுமே இல்லை யென்று அவன் கூறுவான்!

பொம்மலாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்து காட்டும் பொம்மைகளின் நிழல்கள் ஆடுவது தெரிகின்றது. அந்த நிழல்களைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது என்றும், முக்கியமாக எவை நிழல்களுக்குக் காரணமானவையோ அந்தப் பொம்மைகளை எட்டிப் பார்க்கக் கூடாது என்றும், பொம்மைகளே இல்லாமல் நிழல்கள் தாமாகவே உண்டாகிவிட்டன என்றும் பொம்மலாட்டக்காரன் கூறுவது எப்படியோ அப்படித்தான் இருக்கிறது இந்த ஆராய்ச்சி!

வெள்ளத்திலே அலைகள் ஒருவனை அடித்துக் தள்ளிக்கொண்டு போகும்போது, அவன் தான் விரும்பிய இடத்திற்கு நீந்திச் செல்வதாக எண்ணுவது போல் தான் இந்த எண்ணமும்.

ஏழை தன் சுகத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்புகிறான்; அதற்குத் தேவையான அறிவைத் தேடி அலைகிறான். பணக்காரனும் தன் சுகத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறான்; தன் களைப்பு நீங்கி, நேரம் இன்பகரமாகக் கழிவதற்காக விஞ்ஞானத்தையும் கலைகளையும் பற்றிய அறிவைத் தேடுகிறான். பிற்காலத்தில் இவர்களுக்குக் குடும்பங்கள் ஏற்பட்டுப் பெருகும்போது, உடல் வாழ்வுக்கு அவசியமான நன்மையை அடைவதற்கு ஆத்திரமும் அதிகமாகின்றது. ​அந்த ஏழைக்கோ, பணக்காரனுக்கோ ஏதாவது ஒரு சமயம் சந்தேகம் தோன்றலாம்: ‘ஒரு லட்சியமும் அல்லாமல் இது என்ன வாழ்க்கை? கேவலம் உயிர் வாழ்வதற்காகப் போராடுவது ஏன்? நம் குழந்தைகளும் அப்படித்தானே போராடியாக வேண்டும்? இன்பங்களைத் தேடித் தேடி ஏமாந்துபோய், முடிவில் துன்பங்களைப் பெறுவது எதற்காக? நமது கதிதானே நம் மக்களுக்கும் ஏற்படும்?’ என்று அவர்கள் சிந்திக்க நேரலாம்.

போலிச் சமயவாதிகள் இந்தக் கேள்விக்குக் கூறும் விடை இது தான்: ‘வாழ்க்கை துன்பமயந்தான். எப்போதும் இப்படியே இருந்து வந்தது; இனியும் இப்படித்தான் இருக்கும். வாழ்க்கையின் நலன் என்பது இப்போது ஒன்றும் கிடைக்காது. ஒருவனுடைய பிறப்புக்கு முன்னும், மரணத்திற்குப் பின்னாலுமே அது கிடைக்கும். எதிர்காலத்தில் நன்மை கிடைக்க வேண்டுமானால், எங்கள் கொள்கைகளை நம்பி, நாங்கள் விதித்துள்ள சமயச் சடங்குகளை முறையாக நடத்தி வரவேண்டும்?’

மிருக வாழ்க்கையும் மனித வாழ்க்கையும் ​நல்ல வாழ்க்கை வேண்டும்; வாழ்வதில் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதுதான் ஆன்மாவின் அந்தரங்க வேட்கை. மரணத்துக்குப் பின்பே நல் வாழ்வு உண்டாகும் என்பதை எவ்வளவு அழுத்திச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும், மனிதனுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. ​எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வைக்க முடியுமா? இப்போது கிடைத்துள்ள வாழ்வே பொருளற்றதாயிருக்கும் போது, இனி வருவது பொருத்தமான பெருவாழ்வாயிருக்க முடியுமா? அது சரியானதாயிருக்க

பைத்தியம் பிடித்தவனும், முழுமூடனும் குழந்தையைப் போலவே இருக்கின்றனர்; அவர்கள் தாம் வாழ்வதையோ, பிற உயிர்கள் வாழ்வதையோ அறியமாட்டார்கள். ஆதலால், அவர்கள் மனிதவாழ்வு பெற்றிருப்பதாய்க் கருத முடியாது.

உண்மை வாழ்வின் உதயம் ​பயிரின் வாழ்க்கை ஒரு தானிய மணியில் அடங்கிக் கிடக்கின்றது. செடியின் வாழ்க்கை ஒரு வித்தில் அடங்கியிருக்கின்றது. இதே போல உண்மையான வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே மனிதனுள் அடங்கியிருக்கின்றது. ஒரு சமயம் வரும்போது, அது வெளியே தோற்றமாகிறது.

பகுத்தறிவே மனிதனின் விதி ​பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைவதுதான் மிருக உணர்ச்சி கழிவதற்கு ஆரம்பம். பகுத்தறிவை விளக்கிக் கூறவேண்டியது அவசியமில்லை; விளக்கவும் முடியாது. ஏனெனில் நாம் அதை அறிவோம்; நமக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

வாழ்க்கையின் நியதி என்பது பகுத்தறிவின் சட்டமேயாகும். மனிதன் மூன்று நியதிகளுக்கு (அல்லது விதிகளுக்கு) உட்பட்டு நடக்கவேண்டியிருக்கிறது. அவன் உடலில் சேர்ந்துள்ள சடப் பொருள்கள் மற்ற உலகிலுள்ள சடப் பொருள்களுக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். உடல் மற்ற மிருகங்களின் உடல்களைப் போன்றதே; ஆதலால் இது மிருக இயல்புக்கு உரிய விதிப்படி நடந்து தீர வேண்டும். இந்த இரண்டு விதிகளோடு மூன்றாவதான பகுத்தறிவின் விதியும் இருப்பாத மனிதன் ஏற்றுக் கொள்கிறான்.

மிருக இயல்புள்ள நமது அகங்காரத்தைப் பகுத்தறிவுக்குப் பணிந்திருக்கச் செய்வதை அறிந்து கொள்வது தான் அந்த முக்கியமான பொருள். அவ்வாறு பணிந்து நடக்காமலிருந்தால், வாழ்க்கையின் நன்மையை அடைய முடியாது.

ஏனெனில், மனிதன் உண்மையான இன்பத்தை அடைவதற்காக அவனது மிருக இயல்பான அகத்தை ஆண்டு அடக்கவேண்டிய பகுத்தறிவின் விதியை ஆராயாமல், மற்ற ஆராய்ச்சிகளைச் செய்வதால் என்ன பயன் விளையும்?

மிருகங்களிடத்திலும், தாவரங்கள், சடப்பொருள்களிடத்திலும் இல்லாத ஒரு பொருள் மனிதனிடம் இருக்கிறதே என்ற விஷயம் இந்த ஆராய்ச்சியாளரைப் பாதிப்பதில்லை. அந்த ஒரு பொருளைப் பற்றி அறிய வேண்டியதே பயனுள்ள ஆராய்ச்சி என்பதும், அது இல்லாமல் மற்ற அறிவெல்லாம் பயனற்றவை என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.

உண்மை அறிவும் போலி அறிவும்

‘நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், எவ்வளவு அறியாமலிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு. அறியாததை அறிந்துள்ளதாயும், அறிந்ததை அறியாதிருப்பதாயும் எண்ணுவதே போலி அறிவு’ என்று கன்பூஷியஸ் கூறினார்.

நம்மைக் கொண்டுதான் நாம் பிற பொருள்களை அறிகிறோம். நம்மைப் பற்றி நாம் பெற்றுள்ள அறிவே மற்றவைகளை அறிய உதவுகிறது.

வாழ்க்கையும். நாம் பகுத்தறிவு உணர்ச்சியின் விதிக்கு உட்பட்டு நடக்கும் போதுதான் வாழ்க்கை உண்டு. அவ்வாறு அடங்கி நடக்காதபோது வாழ்க்கையும் இல்லை. அதாவது, வெறும் உடலின் மிருக விதிகளின்படியே நடத்தல் மனித வாழ்க்கை ஆகாது. சடத்தில் மிருக வாழ்வு இல்லாதது போலவும், மிருகத்தின் பகுத்தறிவு வாழ்வு இல்லாதது போலவும், பகுத்தறிவின் விதியைப் புறக்கணிக்கும் மனிதனிடம் மனித வாழ்க்கை இல்லாது போகிறது.

தியாகமே வாழ்வின் வழி

பகுத்தறிவுள்ள மனிதன் தன் உடலுக்காக மட்டும் வாழ முடியாது. ஏன் முடியாதென்றால், தான் ஆணவமுள்ள தனி மனிதன் என்பதையும், தன்னைப்போல் தனித்தன்மை பெற்ற மனிதர்களும் ஜீவராசிகளும் இருப்பதையும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சம்பந்தங்களின் விளைவுகளையும் அவன் அறிவான்.

உடல் வாழ்வின் நலத் துறப்பதே மனித வாழ்க்கையின் நியதி, சட்டம். சுயேச்சையாகப் பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிந்து இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், ஒவ்வொரு மனிதனும் மரணத் தறுவாயில் இவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். அப்போது

மூலம்
Leo Tolstoy, லியோ டால்ஸ்டாய். வாழ்க்கை (Tamil Edition) . Azhisi eBooks. Kindle Edition.