குழந்தைகளுக்கு வாழ்வதற்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தைகள் இந்த உலகத்தில் சான்றோராக வாழ வேண்டுமா? இந்த வாழ்க்கையையும் உலகத்தையும் மனிதர்களையும் புரிந்துக் கொண்டு பாதுகாப்பாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? ஆம் என்ற பதில் உங்களிடம் இருந்தால்; இந்த பத்து விசயங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
1. பசி உண்டான பிறகு உணவை உட்கொள்ளப் பழக்குங்கள். பசி உண்டானால் பசியின் தன்மை மற்றும் பசியின் அளவை அறிந்து சாப்பிட கற்றுக் கொடுங்கள். பசி இல்லையென்றால் எனக்கு உணவு வேண்டாம் என்று தைரியமாக சொல்லப் பழக்குங்கள்.
2. கேள்விகள் கேட்க ஊக்குவியுங்கள். யார் எதைச் சொன்னாலும் ஏன்? எதற்கு? எதனால்? அதன் நோக்கம் மற்றும் விளைவு என்ன? என்று கேள்விகள் கேட்கச் சொல்லுங்கள். கேள்வி கேட்காமல் எதையும் நம்பக் கூடாது என்று பழக்குங்கள்.
3. வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். நீங்களும் உடன் அமர்ந்து பயனுள்ளவற்றை வாசியுங்கள். தமிழ் வாசிக்க கற்றுக்கொடுங்கள். தமிழில் தான் உலகின் அனைத்து இரகசியங்களும் ஞானங்களும் உள்ளன. இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் அவசியம் தேவைப்படும்.
4. செல்வத்தின் அவசியத்தைப் புரியவையுங்கள். இந்த உலகில் வாழ்வதற்கு பணம் மிகவும் அவசியம் என்பதை விளக்குங்கள். அதே நேரத்தில் பணம் சேர்ப்பதற்காக மனிதப் பிறப்பு எடுக்கவில்லை என்பதையும் புரியவையுங்கள்.
5. நம் எண்ணப்படிதான் நம் வாழ்க்கை இருக்கும், அதனால் வாழ்க்கை வளமாக வேண்டுமென்றால், மனதை வளமாக வைத்திருக்க வேண்டும் என்பதை புரியவையுங்கள். மனதில் எப்போதும் நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும் தீயனவற்றை விலக்க வேண்டும்.
6. இந்த உலகில் தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது. அதனால் எதற்கும் கலங்க வேண்டாம் அனைத்தும் நிச்சயமாக மாறும் என்று அடிக்கடி கூறுங்கள்.
7. அன்பை அறிமுகப்படுத்துங்கள், மனிதர்களை அறிமுகப்படுத்துங்கள், உறவுகளைப் பேண கற்றுக்கொடுங்கள், உறவுகளின் முக்கியத்துவத்தை விளக்குங்கள்.
8. இயற்கையை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துங்கள். புற்கள் முதலிய, மரங்கள், பறவைகள், மீன்கள், விலங்குகள், பூமி, கிரகங்கள், அனைத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.
9. உங்கள் குழந்தைகளை சிந்திக்க தூண்டுங்கள். சுயமாக முடிவெடுக்க அனுமதியுங்கள். அவர்களுக்கு எது தேவை என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.
10. தானமும் தர்மமும் செய்யப் பழகுங்கள். தர்மங்கள் கொடுக்கும் போது அவர்களின் கைகளால் கொடுக்கப் பழகுங்கள்.
நீங்கள் வாழ்ந்துக் காட்டும் வழியிலும், நீங்கள் கற்றுக் கொடுக்கும் பழக்க வழக்கங்களையும் கொண்டும் தான் உங்கள் பிள்ளைகள் தங்களின் எதிர்கால வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பள்ளிப் பாடங்கள் மட்டுமே ஒரு குழந்தையை சிறப்பாக வாழ வைக்காது.
ஏறத்தாழ 7 வருடங்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் குணங்கள் மாற்றம் அடையும். முதல் ஏழு வருட அனுபவங்களைக் கொண்டு எட்டாவது வருடம் முதல் வாழ்வார்கள். அடுத்த 7 வருடம் அனுபவங்களைக் கொண்டு 14 ஆவது வருடம் முதல் வாழ்வார்கள். மனதின் இந்த மாற்றம் இறுதிவரையில் தொடர்ச்சியாக நடக்கும். மனப் பதிவுகள் சரியாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
1 Comment