குழந்தைகளை வளரவிடுங்கள். குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களை படிக்க வைப்பதோ, திருமணம் செய்துவைப்பதோ அல்ல. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் இந்த உலகில் பிறப்பது பள்ளி பாடங்களைப் படிப்பதற்காகத் தான் என்பதைப் போன்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதும் திருமணம் செய்து வைப்பதும் தான் பெற்றோர்களின் கடமை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் புரிதலாக இருக்கிறது.
இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும், அது ஓரறிவு உயிராக இருந்தாலும் ஆறறிவு உயிராக இருந்தாலும், இந்த பூமியில் பிறப்பெடுப்பது வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்வதற்காகத்தான். வாழ்க்கை, உறவு, அன்பு, பாசம், கருணை, இன்பம், துன்பம், ஏற்றம், தாழ்வு என பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள வரும் உயிர்களை. பள்ளிக்கூடம், வேலை, பணம் என மூன்று விலங்குகளைப் பூட்டி இதுதான் உலகம் என்று சில பெற்றோர்கள் தவறான பாதையைக் காட்டுகிறார்கள்.
பள்ளிப் பாடங்களைப் படித்தால் இந்த உலகில் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற ஒரு மாயை அனைவரிடமும் இருக்கிறது. கல்லூரியைக் கூட தாண்டாத பலர் வியாபாரம் செய்வதையும், கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்காத பலர் கோடீஸ்வரர்களாக இருப்பதையும், எழுதப்படிக்கத் தெரியாத பலர் சகல வசதிகளுடன் வாழ்வதையும், பல்கலைக்கழகம் வரையில் படித்தவர்கள் கூட வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் இருப்பதையும், இந்த உலகில் வாழத் தெரியாமல் தவிப்பதையும் கண்கூடாகப் பார்த்தும் பள்ளிப் பாடம் படித்தால் அனைத்தும் கிடைத்துவிடும், படிக்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற மாயையை மட்டும் மாற்ற இயலவில்லை.
எல்லா பெற்றோர்களும் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன? மனிதர்கள் என்றால் யார்? மனிதர்களின் இயல்புகள் என்ன? செல்வம் என்றால் என்ன? எதற்காகச் செல்வம் சேர்க்கிறோம்? என்பன போன்றவற்றைச் சிந்தித்துப் புரிந்துகொண்டு வாழும் மனிதர்கள் மட்டும்தான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், செல்வந்தர்களாகவும், வாழ்கிறார்கள்.
பெற்றோர்களான நமது கடமையாக இருப்பது பிள்ளைகளை இந்த உலகில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழிகாட்டுவது மட்டுமே. தன் வாழ்க்கையில் நடக்கும், சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும், ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று சிந்தித்து, ஆராய்ந்து வாழும் மனிதர்கள் மட்டுமே அனைத்துத் துறைகளிலும் வெற்றிப் பெறுகிறார்கள். பிள்ளைகளைப் படி படி என்று நச்சரிப்பதும், படிக்கச் சொல்லி வற்புறுத்துவதும் எந்தப் பலனையும் உண்டாக்காது.
வாழ்க்கை என்றால் என்ன? எதிர்கால வாழ்க்கையில் அவர்கள் என்னவெல்லாம் சந்திக்கப் போகிறார்கள்? அனைத்தையும் சமாளித்து வாழ்வது எப்படி? போன்றவற்றைப் புரிய வைத்தால்; அவர்களுக்கு என்னவெல்லாம் தேவை, அவற்றை அடைய என்ன வழி என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற படிப்பை அவர்களே தேடியும் விரும்பியும் படிப்பார்கள்.
ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர், கொண்டுவந்த முகவரிக்குச் செல்ல வழி தெரியாமல் நிற்கும் போது, அவருக்கு வழிகாட்டுவதைப் போன்று; இந்தப் பூமியின் நிம்மதியாக, அமைதியாக, பாதுகாப்பாக வாழ்வதற்கு நம் பிள்ளைகளுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். நாம் போக வேண்டிய ஊருக்குரிய பாதையை அவர்களுக்குக் காட்டக்கூடாது.
அவர்கள் எங்குச்செல்ல விரும்புகிறார்களோ அங்கு செல்வதற்கான வழியைத்தான் கூறவேண்டும். நம்முடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகளின் மீது திணிப்பது, நாம் போகும் ஊருக்கான பாதையை வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய நபருக்குக் கூறுவதைப் போன்றதாகும்.