பொருளாதாரம்

குடும்ப பொருளாதாரம்-வரவும் செலவும் சேமிப்பும்

குடும்ப பொருளாதாரம்-வரவும் செலவும் சேமிப்பும். முன்பு எங்களின் குடும்ப வருமானம் மாதம் ஐயாயிரம் ரூபாய் மட்டுமே. குடும்பம் சற்று சிரமமான சூழ்நிலையில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளாக இதே சூழ்நிலை. பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறிய மாற்றம், குடும்ப வருமானம் சற்று அதிகரித்து மாதம் பத்தாயிரம் ரூபாய் ஆனது. சற்று ஆறுதலான விசயம் தான் ஆனாலும் வருமானம் போதவில்லை.

வீட்டுக்காரர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றபிறகு குடும்ப வருமானம் சற்று அதிகரித்தது. தற்போது மாதம் இருபதாயிரத்துக்கு மேல் வருமானம் வருகிறது. கணவர் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதித்தால் வாழ்க்கை மாறும் வீட்டின் பொருளாதார நிலைமை மேம்படும் என்று எண்ணினோம் ஆனாலும் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. வரும் வருமானம் மாதச் செலவுக்கும் கடன்களைத் திரும்பச் செலுத்தவும் சரியாக இருக்கிறது. பணத்தை மிச்சப்படுத்தவோ, சேமிக்கவோ முடிவதில்லை. இது பெரும்பான்மையான குடும்பங்களின் நிலைமை.

எதனால் இவ்வாறான சூழ்நிலை உருவாகிறது? இதற்குத் தீர்வு என்ன? இதை மாற்ற என்ன வழி?

சிறிய அளவில் வருமானம் வரும்போது, வருமானத்துக்கு ஏற்ப மிகவும் சிக்கனமாக செலவு செய்த குடும்பங்கள், வருமானம் அதிகரிக்கும் போது தனது செலவையும் அதிகப்படுத்திக் கொள்வதினால் உண்டாகும் சூழ்நிலை இது. சிறிய வருமானம், வாழ்க்கைச் செலவுக்கே வருமானம் போதவில்லை, சேமிப்பு என்று எதுவுமில்லை, என்று புலம்பும் குடும்பங்கள் வருமானம் அதிகரிக்கும் போது சிக்கனத்தையும் சேமிப்பையும் பற்றி சிந்திக்க வேண்டும். அதை விடுத்து, வருமானம் அதிகரிக்கும் போது அடக்கி வைத்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும், விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கி குவித்துவிட வேண்டும் என்று எண்ணுவதால் உண்டாகும் அவலம் இது.

மேலும் சிலர் இந்த வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்ற அலட்சியத்தில் கடன்களை வாங்கி தங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். வருமானம் தடைப்படும் வேளைகளில் கடன் தொல்லை காரணமாக இருப்பதையும் இழந்து வறுமையில் சிக்குகிறார்கள். இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்ற புரிதலுடன், இருப்பதைக் கொண்டு சிக்கனமாக வாழும் குடும்பங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

யாருக்கு எப்போது எந்த செலவு உண்டாகும்? எந்த தேவை உண்டாகும்? என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனால் வருமானம் அதிகரித்த போதும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிப்பை அதிகரிக்க வேண்டுமே ஒழிய, செலவையும் ஆடம்பரத்தையும் அதிகரிக்க கூடாது. நிரந்தர வருமானமும் போதிய சேமிப்பும் உண்டாகும் வரையில் ஆசைக்காக எந்த செலவும் செய்யக்கூடாது. அத்தியாவசியச் செலவுகள் போக மீதமுள்ள அனைத்தையும் சேமித்து வைக்க வேண்டும்.

உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக வங்கியில் வைத்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக இருக்கும் பணத்தை, நிலம், கட்டடம், தங்கம், வியாபாரம், காப்பீடு, போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டிலிருந்து வரும் இலாபங்களை மட்டுமே ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும். முதலீடு அப்படியே இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் முதலீட்டை செலவு செய்யக் கூடாது.

வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, சிறியதாகவோ பெரியதாகவோ, ஒரு தொகையை மாதாமாதம் சேமிக்க தொடங்குங்கள். ஒருநாள் அந்த சேமிப்பு வளர்ந்து நிற்கும் போது அதனை முதலீடாக பயன்படுத்துங்கள்.

வருமான, செலவு, மற்றும் சேமிப்பை, பற்றிய உங்களின் புரிதல்களையும், கருத்துக்களையும் கீழே கமெண்ட் செய்யுங்கள். மேற்கொண்டு சிந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X