கொசு மருந்து மற்றும் கொசுவத்தி பாதிப்புகள்
இந்தியாவுக்கு நான் சென்றிருந்த போது கவனித்தேன்; பெரும்பாலான வீடுகளில் இரவு தூங்கும் நேரத்தில் கொசுவர்த்தியைப் பற்ற வைத்துக் கொள்கிறார்கள், அல்லது கொசுவைக் கொல்லும் பூச்சி மருந்தை வீட்டு அறைகளில் அடிக்கிறார்கள், அல்லது மின்சாரத்தில் பொருத்தும் பூச்சி மருந்து கருவியை பொருத்திக் கொள்கிறார்கள்.
எனக்குள் சில கேள்விகள் எழுந்தன:
கொசு மற்றும் பூச்சிகளைக் கொல்லும் அந்த விசங்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன? அவை மனிதர்களுக்கு பாதுகாப்பானவை தானா? கொசு மற்றும் பூச்சிகளைக் கொல்லும் அந்த விஷங்கள் மனிதர்களுக்கு பாதிப்புகளை உருவாக்குமா – உருவாக்காதா?
பல்வகையான இரசாயனங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் கலக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் இவை, மனிதர்கள் சுவாசிக்கும் போது அவர்களின் சுவாசம் மூலமாக மனிதர்களின் நுரையீரலுக்குள் செல்கின்றன, மேலும் ரத்தத்தில் கலக்கின்றன.
சுவாசம் மூலமாகவும் தோலின் மூலமாகவும் உடலுக்குள் செல்லும் இந்தப் பூச்சி மருந்துகள் உடல் மற்றும் இரத்தத்தில் கலக்கும் போது மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை உருவாக்கிடக் கூடும். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள், என அனைவரையும் இது பாதிக்கும்.
நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு, தோல் நோய், முதல் உயிரைப் பறிக்கக் கூடிய அபாயகரமான பல நோய்களைக் கூட உருவாக்கக் கூடியவை இவை. ஒரே நாளில் பெரிய பாதிப்பை மனிதர்களுக்கு உருவாக்காமல் இருந்தாலும் நாளடைவில் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கக் கூடியவை.
1. அதனால் முடிந்தவரையில் வீடுகளில் பூச்சி மருந்து தெளிப்பதையும் பயன்படுத்துவதையும் அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டக்கூடிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
2. சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தி வைத்தால் கொசுக்கள் வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்கலாம்.
3. வீட்டைச் சுற்றிலும் ஆறு, சாக்கடை, குட்டை, எதிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசு உற்பத்தியாவதைத் தவிர்க்கலாம்.
4. தேவைப்பட்டால் கொசு வலைகளைப் பயன்படுத்துங்கள், எந்தக் காரணத்தைக் கொண்டும் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தாதீர்கள்.
Leave feedback about this