மனிதர்கள், விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், என இறைவனின் சிருஷ்டியில் உதித்த அத்தனை உயிரினங்களும் அன்பாகவும் அமைதியாகவும் கூடி வாழ்வதற்காக வழங்கப்பட்டது தான் இந்த பூவுலகம்.
அத்தனை உயிரினங்களும் ஒன்று கூடி அன்புடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து. இந்த பூவுலகம் தான் சொர்க்கமாக இருக்குமோ? என்று வியக்கும் வகையில் இருக்க வேண்டிய பூமி, இது தான் நரகமோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு மனித இனத்தின் வாழ்க்கை தடம்மாறிச் சென்றுவிட்டது. அன்பும் கருணையும் நிறையப் பெற்ற மனித குணம் மங்கி, காமமும் குரோதமும் நிறைந்த விலங்கில் கீழான நிலையில் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
இறைவன், இறையருள், இறையாற்றல், இறையன்பு, என்று என்றும் அழியாத நிரந்தர ஞானங்களால் விரிய வேண்டிய மனிதனின் மனம், பணம் என்ற எந்த நேரத்திலும் அழியக்கூடிய ஒற்றை ஜடப்பொருளைச் சுற்றி சுழல தொடங்கியுள்ளது. பணம் இருந்தால் போதும் இந்த உலகில் எதுவும் கிடைத்துவிடும் என்ற மாயை பெரும்பாலான மனிதர்களிடம் உருவாகியுள்ளது. தனது உண்மையான அழியா நிலையில் இருந்து அழியக்கூடிய உலகுக்கு வந்த மனிதன், மாயையில் உழன்று, தனது நிரந்தரமான அழியா நிலையை மறந்துவிட்டான்.
எருமை சேற்றில் ஊறுவதை பேரானந்தம் என்று எண்ணி மீண்டும், மீண்டும் சேற்றில் ஊறுகிறது. எருமையின் அறியாமையைக் கண்டு, அதன் அழுக்குகளைக் கழுவி சுத்தம் செய்தாலும். மீண்டும் தனக்கு அற்ப சுகத்தைத் தரக்கூடிய சேற்றையே நாடி எருமை மாடுகள் ஓடுவதைப் போன்று. எண்ணற்ற ஞானிகளும் யோகிகளும் இப்பூவுலகில் தோன்றி மானிடர்களுக்கு மீட்புக்கான பாதையைக் காட்டிய பின்னரும் மனிதன் தனது இயல்பு நிலையான, பரமானந்தத்தை உணராமல், அழியக்கூடிய சிற்றின்ப வேட்கைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் இந்த பூமியில் கவலைகளுடனும் துன்பங்களுடனும் உழன்று கொண்டிருக்கிறான்.
உலக வாழ்க்கையைச் சிந்தித்து உணர்ந்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற உண்மையான வேட்கையும் தேடுதலும் உண்டாகும் வரையில் இந்த உலகிலேயே வாழ்க்கை தொடரும். சேற்றுக்கு அடிமையான எருமையைப் போன்றும், சில அற்ப தானியங்களுக்காக தனது சுதந்திரத்தை அடமானம் வைக்கும் பறவையைப் போன்றும் ஆன்மாவின் சுதந்திரம் பறிக்கப்பட்டு இந்த பூமியிலேயே அடைபட்டுக் கிடக்க நேரிடும்.