கிரகணத்தன்று கோயிலுக்குச் செல்லலாமா- கூடாதா? என்ற பெரும் சர்ச்சை தற்போது நம் நாட்டில் எழுந்துள்ளது. பலரும் பலவகையான கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்து ஆகம விதிகளின்படி கிரகணத்தன்று கோயிலுக்குச் செல்லவும் வழிபாடு செய்யவும் கூடாது என்று ஒரு பிரிவினரும், கிரகணத்தை விடவும் முருகக் கடவுளின் சக்தி அதிகம் அதனால் கோயிலுக்குச் செல்லலாம் என்று ஒரு தரப்பினரும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
கோயில் என்பது என்ன? அது எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் மட்டுமே கிரகணத்தன்று கோயிலுக்கு செல்லலாமா கூடாதா என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட பெரும்பாலான கோயில்கள், பல முக்கியமான விசயங்களைக் கருத்தில் கொண்டு வகுத்து அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் நோக்கம், அதில் பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வம், கோயில் நிலம், நிலம் நோக்கும் திசை, நிலத்திலிருந்து கோள்களின் திசை, கோயில் நிலத்திலிருந்து பிரபஞ்சத்தின் கோள்களின் அமைப்பு, அந்தக் கோயிலில் இறங்கும் கதிர்கள், அந்தத் தெய்வச் சிலையில் கலக்கப்படும் கலவை, அந்தக் கலவை ஈர்க்கக் கூடிய பிரபஞ்சச் சக்தி, அந்தச் சக்தியின் தன்மை மற்றும் அதைச் சேர்த்து வைக்கும் காலம். இப்படி பல முக்கியமான விசயங்களைக் கணக்கிட்டு வகுத்து அவை மனிதர்களுக்கு வழங்கக் கூடிய நன்மைகளையும் கணக்கிட்டுத்தான் கோயில் கட்டினார்கள், கட்டவும் வேண்டும். ஆனால் இன்று காளான்களைப் போன்று வீட்டுக்கு ஒன்று கட்டிக் கொள்கிறார்கள். நான் அவற்றைப் பற்றிப் பேசவில்லை, ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட கோயில்களை மட்டுமே பேசுகிறேன்.
கோயில் கட்ட பயன்படுத்தப்படும் அனைத்துக் கணக்குகளும் பஞ்சாங்கத்தையும் கிரக அமைப்பையும் கருத்தில் கொண்டு தான் கணக்கிடப் படுகின்றன. கிரகணம் ஏற்படும் போது, அந்தப் பஞ்சாங்கமும் கோள்களின் அமைப்பும் மாறிவிடுகின்றன. அந்தக் கால கட்டத்தில் கோவிலில் இறங்கும் சக்தியின் தன்மையும் மாறிவிடும்.
கிரகண நேரத்தில் கோயிலில் இறங்கும் சக்தி மனிதர்களுக்கு ஏதாவது தீங்கை விளைவிக்கக் கூடும் என்பதால்தான், கிரகணக் காலத்திலும் மற்ற சில குறிப்பிட்ட நேரங்களிலும் கோயிலுக்குச் செல்லத் தடை விதித்தார்கள். நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் நிச்சயமாக ஒரு நல்ல நோக்கம் இருக்கும்.
அதனால் கிரகண நேரத்தில் கோயிலுக்குச் செல்லாமல் இருப்பது தான் நல்லது. நம்பிக்கை தெளிவான அறிவும் சிந்தனையும் இல்லாத போது மூடநம்பிக்கையாக மாறிவிடும், சிந்தித்துச் செயல்படுங்கள்.
Leave feedback about this