கற்கள் பதித்த நகைகளை வாங்காதீர்கள். ஆபரணக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும், தங்க நகைகள் கூட சில காலங்களுக்குப் பிறகு மினுக்காமல் மங்கிவிடலாம், நகைகளின் அழகும் குறையலாம் ஆனால் கற்கள் பதித்த நகைகள் பல ஆண்டுகளுக்கு அழகாக இருக்கும். ஆனாலும்…
ஆபரண நகைகளில் பதிக்கப்படுபவை பெரும்பாலும் வர்ணக் கண்ணாடிகளாக இருக்கும், அடுத்தது விலை மதிப்பில்லாது வர்ணக் கற்களாக இருக்கும். மிக மிக சொற்பமாகவே விலை மதிப்புடைய ஜாதி கற்கள் நகைகளில் பதிக்கப்படுகின்றன. ஒருவேளை ஜாதி கற்கள் பதிக்கப்பட்டால் அந்த கற்களுக்குத் தனியாக விலை கேட்பார்கள்.
இன்றைய (02/04/2021) ஒரு கிராம் தங்கத்தின் விலை மலேசியாவில் 230 வெள்ளிகள், இந்தியாவில் 4,390 ரூபாய்கள். அதே நேரத்தில் நகைகளில் பதிக்கப்படும் கற்களின் விலை கிராமுக்கு 1 வெள்ளி முதல் 10 வெள்ளிகள் வரையில் இருக்கலாம்.
ஒருவர் 100 கிராம் எடையுடைய நெக்லஸ் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம் அதில் 5 கிராம் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன என்றும் வைத்துக் கொள்வோம்.
அவர் அந்த நெக்லஸை வாங்கும் போது அதில் பதிக்கப்பட்டுள்ள கற்களுக்காக மட்டும் 1,150 வெள்ளி அல்லது 21,950 ரூபாய்கள் செலுத்துகிறார். அத்துடன் சேர்த்து கற்கள் பதிக்க கூலியாக 1 கிராமுக்கு 25 வெள்ளி முதல் செலுத்துவார், அந்த வகையில் 100 கிராம் நகைக்கு 2,500 வெள்ளி கூலியாக சேர்த்துக்கொள்ளப்படும்.
இந்த நெக்லஸை வாங்கும் நபர் அந்த நகையை வாங்கும் போதே, அந்த நெக்லசின் தங்கத்தின் மதிப்பைவிட 3,650 வெள்ளிகள் அதிகமாக செலுத்துவார், இந்திய ரூபாய் மதிப்பில் 63,000 ரூபாய்களுக்கும் மேல்.
நகைகளில் பதிக்கப்படும் ஆபரணக் கற்களுக்காக மட்டுமே பல ஆயிரம் செலவு செய்கிறார்கள், அந்த நகைகளை வாங்குபவர்கள். பண வசதி படைத்தவர்கள், செல்வந்தர்கள் அலங்காரத்துக்காக வாங்கும் போது செலவு செய்வதில் எந்த தவறும் இல்லை, செல்வம் இருக்கிறது அனுபவிக்கிறார்கள்.
ஆனால் சேமிப்பாக, மூலதனமாக நகைகளை வாங்குபவர்கள், கற்கள் பதித்த நகைகளை வாங்கினால், வாங்கும் போதே நகையில் பதிக்கப்பட்ட கற்களுக்கும் அதற்கான கூலிக்கும் நகையின் மதிப்பில் 20% வரையில் நஷ்டத்துடன் தான் வாங்குவார்கள். அலங்கார ஆபரணமாக வாங்கவில்லை என்றால் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை வாங்காதீர்கள்.
நகைகளில் பதிக்கப்படும் கற்கள் பெரும்பாலும் அந்த நகைகளை பயன்படுத்தும் போது கொட்டிவிடும். அடுத்ததாக அந்த நகைகளை விற்க வேண்டிய சூழ்நிலை உண்டானால், அவற்றில் பதிக்கப்பட்டுள்ள கற்களை நீக்கிவிட்டு தங்கத்துக்கு மட்டும்தான் விலை தருவார்கள். நகைகளில் பதிக்கப்படும் கற்களுக்கு எப்போதும் விலையும் மதிப்பும் இருக்காது. அதைப் பண விரயம் என்றுதான் நான் சொல்வேன்.
Leave feedback about this