கர்மவினை என்பது என்ன? “கர்மா மற்றும் வினை இவ்விரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள்தான், மொழிகள் மட்டுமே மாறுபடுகின்றன. கர்மா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு கருமம் அல்லது செயல் என்று பொருள்படும். மனிதர்கள் செய்யும் செயல்களைத் தான் கர்மா என்ற சொல் குறிக்கிறது. யார் எந்த செயலைச் செய்தாலும் அதற்கேற்ற விளைவு ஒன்று உருவாகும். அனைவரும் அவரவர் செய்த செயலுக்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும். பலன் இன்பமானதா, துன்பமானதா, என்பது செய்த செயலைப் பொறுத்தே அமைகிறது. செய்த செயல்களின் காரணமாக விளையும் விளைவுகளுக்கு “ரிபக்க” என்று பெயர்.
கர்மா என்பது உண்மையில் உண்டா இல்லையா?
ஒருவர் சுய நினைவோடு செய்யும் அனைத்துமே கர்மா தான். செயல்களுக்கேற்ற பலன்கள் நிச்சயமாக உருவாகும். தன்னை அறியாமல் தவறுதலாக செய்த செயல்களுக்கு கர்மா கணக்கு கிடையாது. மனப்பதிவுகள் உருவாகவில்லை என்றாலும் கர்மா கணக்கு கிடையாது. உதாரணத்துக்கு பற்றற்ற துறவிகள் பற்றில்லாமல் செய்யும் செயல்களுக்கும், தவறுதலாக சிறு உயிர்களை மிதித்துவிட்டாலும் கர்மா கிடையாது.
பலருக்கு கர்மா என்று ஒன்று உள்ளதா? கர்மா கணக்கு என்று ஏதாவது உள்ளதா? என்ற குழப்பமும் சந்தேகமும் இருக்கலாம். சிலர் கர்மா என்பது இந்து, பௌத்த, சமண மதங்கள் சம்பந்தப்பட்டவை என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் கர்மா என்பது செய்யும் செயலும் அதன் விளைவுகளும் தான். மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு நிச்சயமாக உருவாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மனிதர்கள் செய்யும் செயல்களினால் உருவாகும் சூட்சமமான விளைவுகளைத் தான் கர்மா கணக்கு என்றழைப்பார்கள்.
கர்மாவின் விளைவுகள்
கர்மாவின் விளைவுகள் இவ்வாறுதான் இருக்கும் என்று யாராலும் விளக்கிவிட முடியாது. இயற்கையின் கணக்குகளை யாரும் கணக்கிடவோ கணித்திடவோ இயலாது அல்லவா. இது சரி, இது தவறு என்று மனிதர்கள் போடும் கணக்குகளுக்கும், இயற்கையின் கர்மா கணக்குகளுக்கும் சம்பந்தமே கிடையாது. மனிதர்கள் சரி என்று என்னும் விசயங்கள் இயற்கையில் தவறாக இருக்கலாம், மனிதர்கள் தவறு என்று என்னும் விசயங்கள் இயற்கையில் சரியானதாக இருக்கலாம்.
அந்த யோகம் செய்யுங்கள், இந்த மந்திரம் சொல்லுங்கள், அந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள், இந்த இடத்துக்குச் செல்லுங்கள், அந்த கயிறு கட்டுங்கள், வீட்டில் அதை மாட்டுங்கள், கர்மா கழிந்துவிடும் என்று சொல்லுவதில் அணுவளவும் உண்மை இல்லை. யாராக இருந்தாலும். செய்த செயலுக்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.
கர்மாவை வெல்லும் ஒரே வழி
கருடன் பறப்பதற்கு காற்றின் வேகமோ மழையோ தடையாக இருக்கும் போது, அது மேகத்துக்கு மேலே சென்றுவிடும். மேகத்தின் மேலே இடைஞ்சல்கள் இன்றி சுதந்திரமாக பறக்கும். அதைப் போன்றே கடலில் கொந்தளிப்புகள் உண்டாகும் வேளைகளில் கடல் வாழ் உயிரினங்கள், ஆழ்கடலுக்குள் சென்றுவிடும். அங்கு பாதுகாப்பாக இருக்கும்.
இறை பக்தியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அல்லது ஆன்மீகத்தில் ஈடுபட்டு மேலே சென்றுவிட வேண்டும். அல்லது பற்றற்ற வாழ்க்கையை வாழ்ந்து ஆழமாக சென்றுவிட வேண்டும். இவைதான் கர்மாவை மாற்றும் வழிகள், வேறு வழிகள் கிடையாது. கடவுளைத் தவிர யாராலும் கர்மாவை மாற்ற இயலாது, முடியும் என்றாலும் கடவுள் அதைச் செய்வதில்லை.
அவரவர் விதைத்ததை அவரவர் அறுவடை செய்தே ஆகவேண்டும். மனிதர்களின் விதைப்பு மனதில் தான் தொடங்குகிறது அதனால் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மனம் இல்லாதவர்கள் கர்மா கணக்கு கிடையாது
கர்மா மனதின் மூலமாகவும், சூட்சமமாகவும் செயல்படுகிறது. மனதைத் தெளிவுப்படுத்தி சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே, பழைய கர்மாக்களின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். மற்றபடி அனைவரும் செய்ததை அனுபவித்தே ஆகவேண்டும். பற்று அறுத்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. கர்மா மனதிலிருந்து செயல்படுவதால், மனம் இயங்காதவர்களை கர்மா பாதிக்காது.
புத்தர் சொல்லும் கர்மா
புத்தர் சொல்கிறார், அவரவர் செய்த செயல்களின் பலன்கள் (கர்மா பலன்கள்) காளைகள் பூட்டப்பட்ட மாட்டுவண்டியைப் போன்றது. மனிதர்கள் தான் காளைகள் அவர்கள் செய்த செயல்கள்தான் வண்டி. காளைகள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வண்டி சுயமாக பின் தொடரும் என்கிறார்.
கர்மாவில் இருந்து தப்பிக்க
வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமா? மனதறிந்து யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதீர்கள். மனிதன், விலங்கு, நீர்வாழ் உயிரினங்கள், பூச்சிகள், தாவரங்கள், இயற்கை, என யாருக்குத் தீங்கு செய்தாலும், கண்டிப்பாக பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம், மாணாசெய் யாமை தலை.
குறள் 317
எந்த சூழ்நிலையிலும், எந்த உயிருக்கும், உடலாலும் மனதாலும் ஒரு சிறிய தீக்குக் கூடச் செய்யாமல் இருப்பது தான் சிறப்பான செயலாகும்.
Leave feedback about this