கர்மாக்களின் விதங்கள்
நல்ல கர்மாக்கள்
ஒருவர் செய்த செயல், அல்லது எண்ணிய எண்ணம் எதுவாக இருந்தாலும், அந்த செயல் அல்லது எண்ணம் அந்த செயலை புரிந்தவருக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, இயற்கைக்கோ ஏதாவது ஒரு வகையில் நன்மையானதாக இருந்தால் அது நல்ல கர்மா.
தீய கர்மாக்கள்
தீய கர்மாக்கள் என்பவை உடலாலோ, மனதாலோ, எண்ணத்தாலோ தனக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, இயற்கைக்கோ, ஏதாவது ஒரு துன்பத்தை அல்லது தீங்கை விளைவிப்பதாகும்.
பழைய கர்மாக்கள்
பழைய கர்மாக்கள் என்பவை சிறுவயது முதலாக இன்று வரையில் உடலாலோ, மனதாலோ செய்த செயல்கள். ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பதனால் அவை சென்ற பிறவிகளில் செய்தவையாகவும் இருக்கலாம். எத்தனை பிறப்புகள் எடுத்தாலும் நாம் செய்த பாவ புண்ணியங்கள் நம்மை கண்டிப்பாக பின்தொடரும்.
மனதினால் உண்டாகும் கர்மாக்கள்
மனதினால் உண்டாகும் கர்மாக்கள் என்பவை ஒரு மனிதன் அவனது மனதாலும், எண்ணங்களாலும் உருவாக்கும் கர்மாக்கள். ஒரு மனிதன் மற்ற மனிதர்களின் மீது மனதளவில் பொறாமை படும்போதும், கோபம், வெறுப்பு, பகைமை கொள்ளும் போதும் அங்கே ஒரு கர்ம கணக்கு உருவாகும். நேரடியாக எதுவும் செய்யாமல் இருந்தாலும் மனதளவில் ஒருவர் மற்ற மனிதர்களுக்கு செய்யும் அல்லது நினைக்கும் தீங்குகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் மீண்டும் அவரையே வந்தடையும்.
கர்மாக்களினால் சிலருக்கு நன்மைகள் உண்டாகலாம். சிலருக்கு துன்பங்கள் உண்டாகலாம். ஆனால் இவை இரண்டுமே நாம் விதைத்த விதைகள்தான். இவற்றுக்கு வேறுயாரும் காரணமில்லை, கடவுளும் காரணமில்லை. இதை மனதில் நிறுத்தி வாழ்க்கையில் உண்டாகும் இன்பங்களையும் துன்பங்களையும் மன ஓர்மையோடும், சம தன்மையோடும் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும், துன்பங்கள் நிச்சயமாக வராது. என் கஷ்டங்களுக்கு நான்தான் காரணம் என்று மனதார ஏற்றுக் கொண்டால் கஷ்டங்கள் வந்த தடம் தெரியாமல் மறைந்து போகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.