ரெய்கி

கர்மா கோட்பாடும் தத்துவமும்

கர்மா கோட்பாடும் தத்துவமும். கர்மா என்றால் செயல் என்று பொருளாகும். இது ஒரு சமஸ்கிருதச் சொல், இதன் மூலச்சொல் “கம்ம”, புத்தர் பேசிய பாளி மொழியின் சொல். ஒரு மனிதன் தன் உடலாலும், மனதாலும், செய்யும் செயல்களை, “கர்மா” என்று குறிப்பிடுகிறார்கள். செய்த கர்மத்தினால் விளைந்த விளைவுகளை “ரிபக” என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், செய்யும் ஒவ்வொரு செயலும், அந்த செயலுக்கேற்ற விளைவை அந்த மனிதனின் வாழ்க்கையில் உண்டாக்கும் என்பதே கர்மா கோட்பாடாகும்.

நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும், தீய செயல்களுக்கு தீய பலன்களும் விளையும் என்கிறது கர்மா கோட்பாடு. கர்மா கோட்பாட்டை, நாம் தினமும் செய்யும் ஒரு செயலை வைத்துப் புரிந்துக் கொள்ளலாம். நாம் அனுதினமும் உணவை உட்கொள்கிறோம். உணவை உட்கொண்ட பிறகு அவற்றின் எச்சில்கள் நம் கையில் ஒட்டிக் கொள்கின்றன அல்லவா? உண்ட உணவுக்கு ஏற்ப சுவையும், சத்தும், கழிவும் உடலில் உருவாகின்றன அல்லவா? உணவை உட்கொண்டது ஒரு செயல் (கர்மா). அதனால் உருவான சுவை, சத்து, எச்சில் மற்றும் கழிவுகள் செயலின் விளைவுகள் (ரிபக).

எந்த வகையான உணவை உட்கொண்டீர்கள் என்பதைப் பொறுத்து, நீங்கள் எந்த வகையான சுவையை அனுபவிப்பீர்கள்? எந்த வகையான சத்துக்கள் உருவாகும்? எவ்வளவு கழிவுகள் உருவாகும்? என்பவை மாறுபடுகின்றன.

மனிதர்களின் ஒவ்வொரு செயலும், எண்ணமும், ஒரு விதைக்கு ஒப்பானது. ஒருநாள் அது துளிர்விட்டு முளைத்து, புல்லாகவோ, செடியாகவோ, மரமாகவோ வளர்ந்து நிற்கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஒவ்வொரு விதைக்கும் அதன் முளைக்கும் காலம் மாறுபடலாம். சில விதைகள், சில நாட்களில் முளைத்துவிடும்; சில விதைகள் சில வாரங்களில் முளைக்கும்; சில விதைகள் சில மாதங்களில் முளைக்கும்; ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமானது, ஒவ்வொரு விதையும் நிச்சயமாக முளைத்தே தீரும்.

அதைப் போலவே மனிதன் செய்த, அல்லது செய்யும், செயல்களின் பலன்கள் அவனை வந்தடையும் கால அளவு மாறுபடலாம், ஆனால் வராமல் போகாது. அவன் அவன் செய்ததை அவன் அவன் அனுபவித்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X