கர்மா கணக்கு என்பது வாழ்க்கையின் கணக்கு; யார் யார் என்னென்ன செய்தார்களோ, செய்கிறார்களோ அவற்றுக்கு ஏற்றப் பலன்களை அவர்கள் தங்களின் வாழ்நாளில் அனுபவம் செய்கிறார்கள் அல்லது அனுபவிக்க வேண்டி வரும். செய்த கருமங்களுக்கு மாற்றாக, பூஜை, புனஸ்காரம், வணக்க வழிபாடு, பரிகாரம், எதுவுமே ஏற்றுக்கொள்ள படமாட்டாது. பாவ கணக்குகள் உள்ள ஒருவர், நன்மைகளை செய்து அவரின் பாவங்களைக் கழித்துக்கொள்ள முடியாது. ஒருவர் பற்பல நன்மையான காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர் செய்யும் தீய காரியங்களுக்கான தண்டனையைத் தவிர்க்க முடியாது.
உதாரணத்துக்கு ஒருவர் 10 நல்ல காரியங்களைச் செய்து 10 புண்ணியங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே நபர் 5 தீயச் செயல்களை செய்து 5 பாவங்களைச் சேர்த்துக் கொண்டார் என்றும் வைத்துக் கொள்வோம். அவரின் 10 நன்மைகளை கொண்டு அவர் செய்த 5 பாவங்களைக் கழித்துக் கொண்டு மீதம் 5 புண்ணியங்கள் மிஞ்சாது. அல்லது ஒரு நபர் 10 பாவங்களும், 10 புண்ணியங்களும் சேர்த்துக் கொண்டார் என்றால் இவை இரண்டையும் கழித்து கொள்ள முடியாது. ஒரு நபர் 10 புண்ணியங்களும், 10 பாவங்களும் செய்திருக்கிறார் என்றால்; அவர் 10 நல்ல மகிழ்ச்சியான அனுபவங்களையும், 10 துன்பகரமான அனுபவங்களையும் அனுபவம் செய்வார்.
கர்மா கோட்பாட்டில் கணிதம் கிடையாது. எதனால்? என்ன நோக்கத்துடன் ஒரு செயலைச் செய்தோம்? என்பனவற்றின் அடிப்படையில் தான் செயலின் பலன்கள் அமைகின்றன. ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது, துரோகம் செய்வது, கொலை செய்வது, போன்ற கெட்ட செயல்கள் மட்டுமே தீய கர்மாக்கள் அல்ல. மனதளவில் தீங்கு நினைப்பதும், நன்மையான செயல்களை செய்ய விடாமல் தடுப்பதும், மற்றும் மற்றவர்களின் மனதை வேதனைப் படுத்துவதும் கூட தீய கர்மாக்கள் தான்.
பாவ புண்ணியங்களையும் தாண்டி அன்றாட வாழ்வில் நாம் செய்யும் அனைத்து விசயங்களும் கர்மாக்கள் தான். உதாரணத்திற்கு நாம் உண்ணுவதும் பருகுவதும் கர்மாக்கள் தான். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ன அருந்துகிறோம் என்பதை வைத்து உடலிலும் மனதிலும் விளைவுகள் உருவாக்குகின்றன அல்லவா? யோகா, தியானம், தொழுகை, வழிபாடுகள், பிரார்த்தனைகள் போன்றவையும் கர்மாக்கள் தான் அவை உடலிலும், மனதிலும், உடலின் சக்தியிலும் பல மாற்றங்களை உருவாக்குகின்றன அல்லவா?
பணம் சம்பாதிக்க ஒரு மனிதன் செய்யும் தொழிலும் வேலையும் கர்மா தான். அவர் செய்யும் தொழிலும் வேலையும் அவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்குகின்றன அல்லவா? மனிதர்களுக்கு இடையில் உள்ள உறவுகளும் கர்மாக்கள் தான், ஒவ்வொரு உறவும் நட்பும் ஒரு வகையான நன்மையையோ தீமையையோ அந்த மனிதனின் வாழ்க்கையில் உண்டாக்குகிறது அல்லவா? மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள், மீன்கள், தாவரங்கள், என அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களின் வாழ்க்கையில் சில மாறுதல்களை உண்டாக்குகின்றன. அவைகளுடனான உறவுகளும் கர்மா தொடர்புடையவை தான்.
மனிதனின் சிந்தனையில் உண்டாகும், காமம், கோபம், எரிச்சல், பயம், ஆசை, பற்று, பொறாமை, போன்ற குணங்கள் அனைத்துமே கர்மாக்கள் தான். அவை கண்டிப்பாக மனிதனின் உடலிலும், மனதிலும், சக்தி நிலையிலும் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மனிதன் தனது பஞ்சேந்திரியங்களாலும், மனதாலும் செய்யும் அனைத்து செயல்களும் கர்மாக்கள் தான். பார்ப்பது, கேட்பது, நுகர்வது, உணர்வது, சுவைப்பது, சிந்திப்பது இவை அனைத்துமே கர்மாக்கள் தான். அவற்றுக்கு நிச்சயமாக எதிர் விளைவுகள் உண்டாகும். அந்த விளைவுகள் நன்மையாக விளையுமா? தீமையாக விளையுமா? என்பது செயல்களின் நோக்கத்தை பொறுத்தே அமைகிறது.
Leave feedback about this