ஆன்மீகம்

கர்மா என்பது என்ன?

Buddha Hand Statue

கர்மா என்பது என்ன? “கர்மா” ஒரு சமஸ்கிருத சொல் அதன் பொருள் “செயல்”. அதன் மூலச்சொல் “கம்ம”, இது புத்தர் பேசிய பாலி மொழி சொல். ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும் செய்யும் செயல்களை கர்மா என்ற சொல் குறிக்கிறது. செய்த கர்மத்தினால் விளைந்த விளைவுகளை பாலி மொழியில் “ரிபக” என்று குறிப்பிடுவார்கள்.

ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும் செய்யும் ஒவ்வொரு செயலும், அந்த செயலுக்கேற்ற விளைவை அந்த மனிதனின் வாழ்க்கையில் உண்டாக்கும். நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும், தீய செயல்களுக்கு தீய பலன்களும் விளையும் என்பதே கர்மா கோட்பாடாகும்.

கர்மா கோட்பாட்டை நாம் தினமும் செய்யும் ஒரு செயலை வைத்து புரிந்துக் கொள்வோம். நாம் அனுதினமும் உணவை உட்கொள்கிறோம். உணவை உட்கொண்ட பிறகு அவற்றின் எச்சில்கள் நம் கையில் ஒட்டிக் கொள்கின்றன அல்லவா? உண்ட உணவுக்கு ஏற்ப சுவையும், சத்தும், கழிவும் உடலில் உருவாகும் அல்லவா? உணவை உட்கொண்டது ஒரு செயல் (கர்மா). அதனால் உருவான சுவை, சத்து, எச்சில் மற்றும் கழிவுகள் செயலின் விளைவுகள் (ரிபக).

எந்த வகையான உணவை நீங்கள் உட்கொண்டீர்கள் என்பதை பொறுத்து நீங்கள் எந்த வகையான சுவையை அனுபவிப்பீர்கள்? எந்த வகையான சத்துக்கள் கிடைக்கும்? எவ்வளவு கழிவுகள் உருவாகும்? என்பவை மாறுபடும்.

மனிதனின் ஒவ்வொரு செயலும் எண்ணமும் ஒரு விதையைப் போன்றது. ஒரு நாள் அது கண்டிப்பாக துளிர்விட்டு முளைத்து புல்லாகவோ, செடியாகவோ, மரமாகவோ வளர்ந்து நிற்கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஒவ்வொரு விதைக்கும் அது முளைக்கும் காலம் மாறுபடும். சில விதைகள் சில நாட்களில் முளைக்கும். சில விதைகள் சில வாரங்களில் முளைக்கும். சில விதைகள் சில மாதங்களில் முளைக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமானது, ஒவ்வொரு விதையும் கண்டிப்பாக முளைக்கும்.

அதைப் போலவே மனிதன் செய்த அல்லது செய்யும் செயல்களின் பலன்கள் அவனை வந்தடையும் கால அளவு மாறுபடலாம், ஆனால் வராமல் போகாது. அவன் அவன் செய்ததை அவன் அவன் அனுபவித்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதியாகும்.