தலைப்புகள்
கண்ட நேரத்தில் தூக்கம் வருவதற்கு காரணம். தூங்கக் கஷ்டமாக உள்ளது, தூக்கம் குறைவாக உள்ளது, என்பதெல்லாம் உடலின் தொந்தரவல்ல, அவை அனைத்தும் வெறும் கற்பனை என்பதை முந்தைய கட்டுரைகளில் அறிந்து கொண்டோம். இந்தப் பதிவில் ஏன் அதிகமாக தூக்கம் வருகிறது என்பதையும், ஏன் கண்ட நேரத்தில் தூக்கம் வருகிறது என்பதையும் பார்ப்போம்.
பகல் நேரத்தில் தூக்கம் வந்தால்
அலுவலகத்தில் இருக்கும் பொழுதோ, வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதோ சோர்வு உண்டானால், அல்லது தூக்கம் வந்தால் உடலின் இயக்க சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலால் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்துகொள்ள முடியவில்லை என்று அர்த்தம். அல்லது உங்கள் மனம் கலைத்துவிட்டது என்று அர்த்தம்.
உணவை உட்கொண்ட பின்னர் தூக்கம் வந்தால்
உணவை உட்கொள்வது உடலின் தெம்புக்காக, உடலின் சக்திக்காக என்றால்; உணவை உட்கொண்ட பின்னர் உடலில் தெம்பும், ஆற்றலும் அதிகரிக்கத் தானே வேண்டும் மாறாக எதனால் அசதியும் தூக்கமும் உண்டாகிறது?
உணவு உண்ட பின்பு அசதியோ தூக்கமோ உண்டானால்; உடலில் செரிமான மண்டலம் சீர்கெட்டு இருக்கிறது என்று பொருளாகும். உட்கொண்ட உணவை ஜீரணிக்கும் தன்மையும் ஆற்றலும் உடலுக்கு போதவில்லை என்று அர்த்தம். நன்றாகப் பசி உண்டான பின்னர், பசியின் அளவை அறிந்து உணவை உட்கொண்டால்; செரிமான மண்டலம் சீரடைந்து உணவு முழுமையாக ஜீரணமாகும். உணவு உட்கொண்ட பின்பு அசதியோ தூக்கமோ உண்டாகாது.
உடலுறவுக்குப் பின் தூக்கம் வந்தால்
இன்று பல கணவன் மனைவிகள் உடலுறவுக்குப் பின்னர், சோர்வு உண்டாகி தூங்கி விடுகிறார்கள். உடலுறவுக்குப் பின்னர் சோர்வோ தூக்கமோ ஏற்பட்டால் உடலில் சக்தி உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலால் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்துகொள்ள முடியவில்லை என்று அர்த்தம்.
காலையில் எழும்போது எப்படி இருக்க வேண்டும்
காலையில் எழும்போது அழகான பெண்ணைப் பார்த்த இளைஞர்களைப் போன்று உற்சாகமாக இருக்க வேண்டும். காலையிலேயே ஏன் எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணமோ, மீண்டும் உறங்க வேண்டும் என்ற எண்ணமோ உருவாகக் கூடாது.
காலையில் எழும்போது உற்சாகமில்லாமல் உடல் சோர்வாகக் காணப்பட்டால் உடலில் சக்தி உற்பத்தியும், சக்தி சேமிப்பும் முறையாக நடக்கவில்லை என்று அர்த்தம். காலையில் சூரிய உதயத்துக்குப் பின்பு எவ்வளவு தாமதமாக எழுகிறீர்களோ, உங்கள் உடல் அவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். காலை சூரிய உதயத்திற்குப் பின்னர் எவ்வளவு விரைவாக எழுகிறீர்களோ அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.