காணும் காட்சிகளால் மனதில் உருவாகும் பாதிப்புகள். நீங்கள் ஒரு பேய்ப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது சாதாரண சினிமா என்பதும், அந்த திரையில் தெரியும் காட்சிகளால் உங்களுக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாது என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும் அல்லவா? அவ்வாறு இருக்கையில் அந்த சினிமாவில் நீங்கள் காணும் உருவங்களைக் கண்டும், ஓசைகளைக் கேட்டும், உங்களுக்கு அச்ச உணர்வு உருவாகிறதா இல்லையா?
அது பொய், வெறும் கற்பனை என்று தெரிந்தும் அச்சம் உருவாவது எதனால்? திரைப்படத்தைப் பார்த்து முடித்து வீடு திரும்பிய பிறகும் அந்த அச்ச உணர்வு உங்களைத் தொற்றிக் கொண்டிருப்பது எதனால்? படம் பார்த்து பல நாட்களுக்குப் பிறகும் தனிமையில் இருக்கும் போது திரைப்படத்தில் பார்த்த அந்த உருவங்கள் உங்கள் சிந்தனையில் வந்து போவது எதனால்? காரணம் திரைப்படத்தில் நீங்கள் பார்த்த காட்சிகளும் உருவங்களும் ஓசைகளும் உங்கள் மனதில் பதிந்துவிட்டன.
திரைப்படங்கள் மட்டுமின்றி உங்கள் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நீங்கள் பார்த்த பல நிகழ்வுகளும், காட்சிகளும் உங்கள் மனதில் பதிந்து, அடிக்கடி உங்கள் சிந்தனைக்கு வந்துபோகும். அவை உங்கள் வாழ்க்கையில் நல்ல விளைவுகளையும், தீய விளைவுகளையும், சில மாற்றங்களையும் உருவாக்கலாம்.
உங்கள் வாட்ஸ்அப்பில் வரும் விபத்து, கொலை, திருட்டு, பாலியல் பலாத்காரம், மற்றும் மற்ற தீய விசயங்கள் தொடர்பான, செய்திகள், படங்கள், மற்றும் காணொளிகளை நீங்கள் பார்த்தால், அவையும் உங்கள் மனதில் பதிவாகும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவை உங்கள் வாழ்க்கையில் இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.
நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற காட்சிகள், பதிவுகள், இடங்கள், படங்கள், மற்றும் நபர்களை, பார்க்காமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.