ஜீவசமாதி என்றால் என்ன? ஒரு ஆன்மா இந்த உலகில் வாழ வேண்டுமென்றால் அதற்கு ஒரு உடல் தேவைப்படும். உடலும் உயிரும் இணைந்தால் மட்டுமே ஆன்மாவுக்கு இயக்கம் இறுக்கம். உயிரைப் பிரிந்தால் உடல் அழிந்துவிடும், உடல் அழித்துவிட்டால் அந்த உடலுக்குச் சொந்தமான ஆன்மா ஆவியாக மாறிவிடும்.
ஆவியான ஆன்மா அதன் விருப்பம் போல் இயங்க முடியாது. அதனால், நம் சித்தர்களும் ஞானிகளும் அவர்களுக்கு இந்த உலகில் கடமைகள் மீதமிருந்தும், ஆயுள் முடிவு நெருங்கிவிட்டால் அவர்களின் உடல் அழியாமல் இருப்பதற்கு சில பயிற்சிகளையும் வழிமுறைகளையும் பின்பற்றி தங்களின் உடலை அழியாமல் பாதுகாத்தார்கள்.
ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் உடலுக்கு சமாதி எழுப்பி அதனுள் அமர்ந்து கொள்வார்கள். ஒரு சில பயிற்சிகளின் மூலமாக உயிரை உடலுக்குள்ளேயே தேக்கி வைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடலின் இயக்கம் நின்றுவிடும், உயிர் அடங்கிவிடும், பின் சமாதியை மூடிவிடுவார்கள். அவர்களின் உடலில் அசைவு இல்லாமல் இருந்தாலும் உயிர் (ஜீவன்) அந்த உடலின் உள்ளேயே ஒடுங்கி இருப்பதால் அதற்கு ஜீவசமாதி என்று பெயர் வைத்தார்கள். ஜீவசமாதியை அடைந்தவர்களின் நோக்கம் நிறைவேறும் வரையில் அந்த சமாதியில் உடலும் உயிரும் அழியாமல் உயிருள்ள மனிதரைப் போன்றே இருக்கும்.
உலக வாழ்க்கையில் இருந்த போது அந்த சித்தர், ஞானி, மகான், என்னவெல்லாம் செய்தாரோ, அவருக்கு என்னவெல்லாம் ஆற்றல்கள் இருந்தனவோ அவை அனைத்தையும் அவர் சமாதியில் இருந்த நிலையிலேயே செயல்படுத்த முடியும்.
ஜீவசமாதி என்பது உயிரோடிருக்கும் ஒரு குருவுக்கு சமமானதால், ஜீவசமாதிகளுக்கு கோயில்களை விடவும் ஆற்றலும் மரியாதையும் முக்கியத்துவமும் அதிகம்.
Leave feedback about this