ஆரோக்கியம்

ஜீரணத்திற்கு உதவும் இனிப்பு சுவை

ஜீரணத்திற்கு உதவும் இனிப்பு சுவை. ஒரு ஏழை விவசாயி வெறும் கஞ்சியைக் குடித்துவிட்டு, கடுமையாக உழைக்கிறார், கடினமான வேலைகளைச் செய்கிறார். ஆனால் வசதி படைத்தவரோ மிகவும் ஆரோக்கியமான, சத்துக்கள் நிறைந்தது (என்று நம்பப்படும்) உணவுகளைச் சாப்பிடுகிறார், ஆனால் சாப்பாட்டுக்குப் பின் வயிற்று பாரமும், அசதியும், தூக்கமும் உண்டாகி அவதிப்படுகிறார். இவை இரண்டுக்கும் என்னக் காரணம்? அஜீரணம்…

முன்பெல்லாம் உணவு வேளைகளில் இனிப்பான பழங்களைச் சாப்பிடுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். என் தாத்தாவும் உணவுக்கு முன்பு அல்லது பின்பு வாழைப்பழம் சாப்பிடும் வழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் இன்றைய தலைமுறையில் உணவுக்கு முன் பழங்களைச் சாப்பிடும் பழக்கம் முற்றாக ஒழிந்துவிட்டது என்றுகூடக் கூறலாம். உணவு வேளைகளில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள் கூட இனிப்பான பழங்களுக்குப் பதிலாக இனிப்பு பலகாரங்களைச் சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.

உணவு வேளைக்குப் பின்னர் இனிப்பு சாப்பிடுவதை இன்றும் நாம் விசேஷங்களில் காணலாம். விருந்துக்குப் பின்னர் பாயாசம், இனிப்பான கஞ்சி அல்லது பலகாரங்கள் பரிமாறப்படுகின்றன. ஒரு சிலர் மட்டுமே விருந்துகளில் பழங்களைப் பரிமாறுகிறார்கள். பழங்களின் முக்கியத்துவம் மனிதர்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று கூறலாம்.

ஜீரணத்திற்கு உதவும் இனிப்பு சுவை

சிலர் மதிய உணவுக்குப் பின்னர் உட்கொண்ட உணவு ஜீரணம் ஆகாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக விருந்துகளில் உண்டவர்களும், அதிகமாக உணவை உட்கொண்டவர்களும் உணவை ஜீரணிக்க முடியாமலும் மூச்சுவிட முடியாமலும் சிரமப்படுவார்கள். இவ்வாறு சிரமப்படும் சிலர் சோடா, செவனப், பெப்சி, கோலா, எலுமிச்சை ஜூஸ், பழ ஜூஸ், இஞ்சி டீ, டீ, போன்றவற்றை அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.

உணவு வேளைகளுக்குப் பிறகு இனிப்பான பானங்களை அருந்தினால் மட்டுமே அவர்களின் வயிறு லேசாக இருப்பதாக உணர்வார்கள்; இல்லையென்றால் வயிற்றில் ஜீரணம் நடக்காதது போலும், வயிறு கனப்பது போலும், மூச்சுவிட சிரமப்படுவது போலும் உணர்வார்கள்.

உண்மையில் அவர்களின் ஜீரண மண்டலம் பலவீனமாக உள்ளது அதனால்தான், உணவை உட்கொண்ட பிறகு உறக்கம் உண்டாவதும், சோர்வு உண்டாவதும், வயிறு பாரமாக இருப்பதும், வயிற்று உப்புசம், மூச்சுவிடச் சிரமம், போன்று பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட செரிமானக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவியது அவர்கள் அருந்தும் பானங்கள் அல்ல, மாறாக அவற்றில் கலந்திருக்கும் இனிப்பு சுவையே. செரிமானம் முழுமையாக நடைபெற இனிப்பு சுவை மிகவும் அவசியமானது. அதனால்தான் நம் முன்னோர்கள் உணவு வேளைகளுக்கு முன்பாக பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

முறையாக ஜீரணமாகாத உணவுகள்தான் வயிற்றிலும் குடலிலும் தேங்கி பல நோய்களை உருவாகுகின்றன. செரிமானம் முறையாக நடைபெற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

1. பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள் அதுவும் பசிக்குத் தகுந்த அளவோடு சாப்பிடுங்கள்.

2. எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவுகளையும் உடலுக்கு ஒத்துப் போகும் உணவுகளையும் மட்டுமே உட்கொள்ளுங்கள்.
உணவை நன்றாக மென்று விழுங்குங்கள்.

3. சாப்பிடும் போது தண்ணீர் அருந்தாதீர்கள்.

4. சாப்பிடும்போது உணவில் மட்டும் கவனம் செலுத்துங்கள்

5. உணவு உட்கொண்டு 30 நிமிடங்கள் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

6. உணவை உட்கொள்வதற்கு முன்பாக சிறிது இனிப்பான பழங்களை உட்கொள்ளுங்கள்.

இனிப்பு சுவை மண்ணீரலைப் பலப்படுத்தும் ஜீரணம் சுலபமாக நடைபெற உதவும். அதுவும் இனிப்பான பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நன்மையானது. செரிமானம் முறையாக நடைபெறும் அதே வேளையில் உடலுக்குத் தேவையான சத்துக்களும் கிடைக்கும். இந்த பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

உணவு உட்கொண்ட பிறகு சோடா, செவனப், பெப்சி, கோலா, டீ, காபி, போன்றவற்றை அருந்தும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிடலாம், பழ ஜூஸ், லெமன் ஜூஸ் போன்றவற்றை அளவாக அருந்தலாம்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X