இயற்கையும் மனித வாழ்க்கையும். நமக்கு எவ்வாறான வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளது? இந்த வாழ்க்கையை எப்படி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்? என்பதைப் புரிந்துகொள்ளாமல்; மற்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்து, அதைப் போல் வாழ வேண்டும் என்று முயற்சித்து பலர் தனது சுயத்தை இழந்து தவிக்கிறார்கள்.
மனிதர்களின் வாழ்க்கை நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்க வேண்டும். நம்முடன் இணைந்து வாழும் மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஜீவன்கள் எல்லாம் அமைதியான அழகான ஒரு வாழ்க்கையை வாழும் போது. ஆறறிவு உயிரினமாக இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், இருக்க வேண்டும்? ஆனால் விலங்குகளிடம் இருக்கும் அமைதியும், நிம்மதியும், மகிழ்ச்சியும், மனிதர்களிடம் இருப்பதில்லையே ஏன்?
மனிதர்கள் பெரும்பாலும் மற்றவர்களைப் பார்த்து வாழ்வதிலும், மற்றவர்களுக்காக வாழ்வதிலும், தங்களது வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். மற்றவர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதால் மனிதர்கள் தங்களது நிம்மதியையும் இழந்து விடுகிறார்கள்.
விலங்குகளில் ஆடு – மாட்டைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை, புலி – சிங்கத்தைப் போல் வாழ முயற்சிப்பது இல்லை, காகம் – குயிலைப் போல் பாட முயற்சி செய்வதில்லை, கெளுத்தி மீன் – சுறா மீனாக மாற துடிப்பதில்லை, அவ்வளவு ஏன் பறவை இனத்தைச் சேர்ந்த கோழியும் சேவலும் கூட மற்ற பறவைகளைப் போன்று பறப்பதற்கு முயற்சி செய்வதில்லை; பறக்க இயலாமையை ஒரு குறையாக நினைத்து வருந்துவதும் இல்லை.
ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்கள் வரையில் தனக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையை, உள்ளது உள்ளபடி முழுமையாக ஏற்றுக் கொள்கின்றன. அந்த வாழ்க்கையின் தன்மைகளையும், இயற்கையின் அமைப்புகளையும், தனது இயல்புகளையும், மாற்றும் முயற்சியில் அவை இறங்குவதில்லை. இயற்கை தனக்கு வழங்கிய வாழ்க்கையையும் அதன் அமைப்பையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு. தனக்கு விதிக்கப்பட்ட எல்லைகளை மீறாமல் அமைதியான வாழ்க்கையை வாழ்கின்றன.
மனிதர்களோ இயற்கையின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை சிந்திக்காமல்; மனிதர்களுக்கு இயற்கை என்னென்ன தன்மைகளையும், குணங்களையும், வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும், உறவு முறைகளையும், அமைந்திருக்கிறது என்பதைச் சிந்தித்துப் புரிந்து கொள்ளாமல்; தனது மன இச்சைகளுக்கும், ஆசைகளுக்கும், கட்டுப்பட்டு, மனோ இச்சைகளைத் திருப்தி படுத்துவதற்காகவே ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இயற்கையின் சட்டங்களை மீறும்போது அவை தீயவிளைவுகளை விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாமல், இயற்கையின் சட்டங்களை மீறுகிறார்கள். அந்த விதி மீறல்களுக்காக அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளோ மிகக் கடுமையானதாக இருக்கின்றன. இயற்கை விதித்திருக்கும் உணவு முறைகளை மீறும் போது உடல் உபாதைகளை தண்டனையாக அளிக்கிறது. கழிவு நீக்கச் சட்டங்களை மீறும் போது நோய்களைத் தண்டனையாக வழங்குகிறது. வாழ்க்கைமுறை சட்டங்களை மீறும் போது துன்பங்களையும், தொந்தரவுகளையும் தண்டனைகளாக வழங்குகிறது.
இந்த பூமியில் வாழ்வதற்கு பணம் தேவை, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க ஒரு தொழில் தேவை. நாம் வாழ்வதற்காகத்தான் பணமும் தொழிலும் தேவைப்படுகின்றன என்ற தெளிவு இல்லாததால். பணத்துக்காகவும், தொழிலுக்காகவும், பல இயற்கையின் விதிகளை மீறுகிறார்கள். அதனால் உடல் அளவிலும், மனதளவிலும், சக்தி நிலையிலும், பல தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். வாழ்க்கையிலும் பல சிரமங்களை எதிர் கொள்கிறார்கள். வாழ்க்கையையும் இயற்கையையும் புரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.