இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், இயற்கையைச் சார்ந்து வாழ்தல், என்றெல்லாம் குறிப்பிடுகிறார்களே; இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? எதனால் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும்?
இயற்கையைச் சார்ந்த வாழ்க்கை முறைகளை பின்பற்றுபவர்களுக்கும், இயற்கை மருத்துவத்தை பின்பற்றுபவர்களுக்கும்; செயற்கையான வாழ்கை முறையையும், உணவு முறையையும், ஆங்கில மருத்துவத்தையும் பின்பற்றுபவர்களுக்கும்; வாழும் நாட்கள் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கின்றன.
இயற்கையைப் பின்பற்றி வாழ்பவர்கள் மட்டும் 150 ஆண்டுகள் வாழ்வார்கள் என்றால் பரவாயில்லை. இயற்கை வாழ்வியலுக்கும், செயற்கை வாழ்வுக்கும், பெரிதாக ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே, இருவருடைய ஆயுட்காலமும் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கிறது. பிறகு எதற்காக இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும்? என்று கேட்பவர்களுக்குப் பதில்.
இயற்கையாக வாழ்பவர்களுக்கும், செயற்கையாக வாழ்பவர்களுக்கும், ஆயுள் காலம் ஏறக்குறைய ஒரே அளவு இருக்கலாம் ஆனால் அவர்களின் வாழ்க்கையின் தரமும் திருப்தியும், மாறுபட்டதாக இருக்கும்.
இயற்கையைச் சார்ந்து வாழ்பவர்கள் நோய் நொடிகள் எதுவுமின்றி, ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வார்கள், அமைதியும், மகிழ்ச்சியும், அவர்களின் வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும். ஒருவேளை நோய் நொடிகள் உருவானால், வந்தது கூடத் தெரியாமல், நோய் நொடிகள் விரைவாக குணமாகிவிடும்.
செயற்கையாக வாழ்பவர்களுக்கு, ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றினாலும். நிற்க முடியவில்லை, நடக்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டால் ஜீரணிக்க முடியவில்லை, மலம் கழிக்க முடியவில்லை, உறங்க முடியவில்லை, இல்லறத்தில் சந்தோஷங்களை அனுபவிக்க முடியவில்லை, மன நிம்மதி இல்லை, இடுப்பு வலிக்கிறது, கை கால் வலிக்கின்றன, தலை வலிக்கிறது, உடல் உறுப்புகளின் பலம் குறைகிறது, உடல் உறுப்புக்களின் செயல் திறன் குறைகிறது, என்று ஏதாவது ஓர் உபாதையுடன் அவர்களின் வாழ் நாட்களைக் கழிக்க வேண்டிவரும். செயற்கையாக வாழ்பவர்கள், மன நிம்மதியின்றி எதையாவது ஒன்றைப் பார்த்துப் பயந்து தங்களின் வாழ்நாட்களை அச்சத்துடன் கழிக்க நேரிடும்.
இயற்கையாக வாழ்தல் என்பது ஒன்றும் பெரிய கடினமான காரியம் இல்லை. உங்களுடைய உடலும், மனமும், என்ன சொல்கிறது என்பதை மட்டும் பின்பற்றி வாழ்தல் தான் இயற்கையைச் சார்ந்து வாழ்தல். இந்த உலகத்துக்கும், இயற்கைக்கும், அதன் உயிர்களுக்கும், உங்களுக்கும் எந்த வகையான தீங்கும் செய்யாமல் வாழ்வது தான் இயற்கை வாழ்வியல்.
இயற்கையைச் சார்ந்து வாழ்பவர்கள் சில ஆண்டுகள் வாழ்ந்தாலும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச் செல்வார்கள். நோய்நொடி, வலிகள், குறைபாடுகளுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விடவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், 50 ஆண்டுகள் வாழ்ந்து விட்டுச் செல்வது சிறப்பல்லவா?
அடுத்ததாக பொருளாதாரத் தாக்குதல். செயற்கையாக வாழ்பவர்கள் தங்களின் வாழ்நாட்களில் சம்பாதிப்பவற்றில் பாதிக்கு மேல் ஏதாவது ஒரு வகையில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இழந்துவிடுவார்கள். மருத்துவம், அழகு, ஆரோக்கியம், நாகரீகம், கல்வி, நவீனமயமாக்கல், முன்னேற்றம், சந்தோசம், குதூகலம், என்று ஏதாவது ஒரு வழியில் அவர்கள் சம்பாதித்த பணத்தை பெரும் நிறுவனங்களிடம் இழப்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.