இறைவனின் இரகசியம் மனிதன், மனிதனின் இரகசியம் இறைவன் என்று கூறுவார்கள். இறைவனைப் பற்றி மனிதர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அதனால் இறைவன் மனிதனின் இரகசியம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதர்களைப் படைத்த இறைவனுக்கு மனிதன் ஒரு இரகசியம் என்று ஏன் கூறுகிறார்கள்? இறைவனால் கூட அறிந்துக் கொள்ள முடியாத இரகசியம் என்ன இருந்துவிட போகிறது மனிதனிடம்.
இறைவனின் படைப்பில் ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையில் உள்ள தாவரங்கள், புழு பூச்சிகள், ஊர்வன, நீந்துவன, பறப்பன, விலங்குகள், என எதற்குமே சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலும் உரிமையும் வழங்கப்படவில்லை. இறைவன் எவ்வாறு படைத்திருக்கிறானோ, பிறப்பு முதல் இறப்பு வரையில் அவ்வாறு மட்டுமே அவை செயல்பட முடியும். ஒரு ஆடோ, மாடோ, கரடியோ, சிங்கமோ, கடல் வாழ் உயிரினங்களோ எதைச் சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்க முடியாது. அவற்றின் உணவுகள் எவை என்பது முன்பே தீர்மானிக்கப் பட்டவை அவற்றைத் தவிர வேறு எதையும் அந்த உயிரினங்கள் உணவாக எண்ணாது தேடியும் செல்லாது.
இந்த உலகில் இருக்கும் அனைத்து தாவரங்களுக்கும் ஒரு குணமும், தன்மையும், தொழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை மீறி எந்த ஒரு தாவரமும் செயல்பட முடியாது. அதைப்போல் அனைத்து விலங்குகளுக்கும் ஒரு குணமும், தன்மையும், தொழிலும் கொடுக்கப் பட்டுள்ளது. அவற்றை மீறி எந்த ஒரு உயிரினமும் செயல்பட முடியாது. அதனால் தாவரங்களும் விலங்குகளும் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் வாழும் என்று இறைவனுக்குத் தெரியும்.
ஆனால் ஆறாவது அறிவுடைய மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றலும், அறிவும், முடிவெடுக்கும் உரிமையும் வழங்கப்பட்டிருக்கிறது. அவன் இந்த பூமியில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அவனுக்கு எந்த தடைகளும் உருவாகாது. அவனை மட்டுப்படுத்த எந்த சக்தியும் கிடையாது.
மனிதர்களின் வாழ்க்கையிலும், சிந்தனையிலும், முடிவுகளிலும் இறைவனும் குறுக்கிடுவதில்லை. அதனால் மனிதன் எவ்வாறு வாழ்வான்? எவ்வாறு சிந்திப்பான்? எவ்வாறு முடிவெடுப்பான்? என்ன செய்யப் போகிறான்? என்று இறைவனுக்குக் கூட தெரியாது. அதனால்தான் மனிதர்கள் இறைவனின் ரகசியம் என்று குறிப்பிடுகிறார்கள்.