இளம் தலைமுறையே உலகில் வாழ கற்றுக்கொள்ளுங்கள். இந்த வாழ்க்கையையும் உலகத்தையும் மனிதர்களையும் புரிந்துக் கொண்டு பாதுகாப்பாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக வாழ்வதற்கும்; இந்த உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ச்சியும் வெற்றியும் பெறுவதற்கும் இவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்.
1. பசி உண்டான பிறகு உணவை உட்கொள்ளப் பழகுங்கள். பசி உண்டானால் பசியின் தன்மை மற்றும் பசியின் அளவை அறிந்து சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள். பசி இல்லையென்றால் எனக்கு உணவு வேண்டாம் என்று தைரியமாக கூறுங்கள்.
2. யார் எதைச் சொன்னாலும் ஏன்? எதற்கு? எதனால்? அதன் நோக்கம் மற்றும் விளைவு என்ன? என்று கேள்விகள் கேட்டுப் பழகுங்கள். எதிர்க் கேள்வி கேட்காமல் யார் எதைச் சொன்னாலும் நம்பாதீர்கள் பின்பற்றாதீர்கள்.
3. வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வயதுக்கு ஏற்ற நூல்களை வாசியுங்கள், அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழ் வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள். தமிழில் தான் உலகின் அனைத்து இரகசியங்களும் ஞானங்களும் உள்ளன. இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு தமிழ் தேவைப்படும்.
4. இந்த உலகில் நிம்மதியாக வாழ்வதற்கு செல்வம் மிகவும் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இன்றே உண்டியலில் பணம் சேமிக்க தொடங்குங்கள். உண்டியல் நிறைந்தும் வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கி சேமித்து வையுங்கள்.
5. நம் எண்ணப்படிதான் நம் வாழ்க்கை அமையும், அதனால் வாழ்க்கை வளமாக வேண்டுமென்றால், மனதை வளமாக வைத்திருக்க வேண்டும். மனதில் எப்போதும் நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும் தீயனவற்றை விலக்க வேண்டும். நல்ல பயனாக விசயங்களை மட்டும் பார்க்கவும், கேட்கவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
6. இந்த உலகில் தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது. அதனால் எதற்கும் கலங்கி நிற்காதீர்கள், அனைத்தும் நிச்சயமாக மாறும். எந்த சூழ்நிலையிலும் மனத் தைரியத்தை இழந்து விடாதீர்கள். தைரியமாக அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள்.
7. மனிதர்கள் தனியாக வாழ முடியாது. நாம் நிம்மதியாக வாழ்வதற்கு உறவும் நட்பும் மிகவும் அவசியம். அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையுடனும் பழகுங்கள்.
8. இந்த உலகில் அழகும் அதிசயமும் நிறைந்து கிடக்கின்றன. முதல் அதிசயம் இயற்கை, புற்கள், செடிகள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மலைகள், ஆறுகள், கடல், அனைத்தையும் ரசிக்க நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
9. சுயமாக சிந்திக்க, முடிவெடுக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை மிக நீண்டது, எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் அமைதியாக, நிதானமாக, ஆழமாக, சிந்தித்து முடிவெடுங்கள்.
10. உங்களிடம் இருப்பவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்துப் பழகுங்கள். சிறியதாகவோ பெரியதாகவோ இருப்பதை தேவைப்படுவோருக்கு கொடுங்கள். தானமும் தர்மமும் மனிதனுக்கு நிம்மதியையும் மன அமைதியையும் தரும்.
11. வாழ்க்கை அனுதினமும் மாறிக்கொண்டே இருக்கும் அதற்கேற்ப உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியும் உலகிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
12. சமுதாயத்துடன் இணைந்து ஒற்றுமையாக வாழுங்கள், வளருங்கள். ஓடாத நீர் சாக்கடையாக மாறிவிடும்.
13. உங்கள் சுய மரியாதையையும், தனித் தன்மையையும், எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களின் தனித் தன்மைதான் உங்கள் அடையாளம்.
14. எப்போதும் புதிய விசயங்களை கற்றுக் கொண்டு, உங்களை மேம்படுத்திக் கொண்டே இருங்கள். தினமும் நாளிதழ், வார இதழ், மற்றும் நூல்களை வாசியுங்கள்.
15. எப்பொழுதும் மன அமைதியுடன் வாழுங்கள். கர்வம், எரிச்சல், திமிர், அச்சம், கவலை போன்றவை அண்டாமல் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
1 Comment