இளம் பிராயத்தில் தைரியத்தை விதைக்க வேண்டும். இளமைப் பருவம் என்பது மிகவும் முக்கியமான, ஒரு மனிதனின் மரணம் வரையிலான எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய பருவமாகும். இளம் பிராயத்தில் ஒரு மனிதன் பார்க்கும் மனிதர்களும், அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும், அவன் கற்றுக்கொள்ளும் விசயங்களும் தான் அவனது வாழ்வின் ஏற்றத்தையும் தாழ்வையும் நிர்ணயிக்கின்றன.
குழந்தைகளுக்கு இன்பங்களையும், மகிழ்ச்சியையும் மட்டுமே காட்டி வளர்க்கக் கூடாது. இந்த உலகில் இருக்கும் தீயவற்றையும் காட்டி வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால் தான் இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய தெளிவான பார்வை அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
கூட்டுக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் சிறுவயது முதலாக பல்வேறு பிரச்சினைகள் அந்தக் குடும்பங்களில் நடப்பதைப் பார்த்து வளர்வார்கள். இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை, வாழ்க்கையில் இதுபோன்ற பல்வேறு விசயங்களை நாம் சந்திக்க நேரிடும் என்று சிறுவயதிலேயே அதற்குத் தயாராகிறார்கள். சிறுவயது முதலே எந்தப் பிரச்சனையை எவ்வாறு அணுக வேண்டும் என்று பெரியவர்கள் எடுக்கும் முடிவுகளை பார்த்தும் பழகிக் கொள்வார்கள்.
சிறு குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கு அதிக கவனிப்பும் சந்தோஷமும் கிடைக்கும். அதனால் அவர்கள் சந்தோசம் மட்டும்தான் உலகம் என்று எண்ணி வளர்கிறார்கள். வளர்ந்த பிறகு வாழ்க்கையில் தோல்வியோ, நஷ்டமோ, கஷ்டமோ, துன்பமோ, துயரமோ, உண்டானால் அவற்றைச் சமாளிக்க தெரியாமல் திணறிப் போகிறார்கள். சிலர் அச்சத்தினால் தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.
பள்ளிக்கூடப் படிப்பை மட்டுமே நம்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கக் கூடாது. பள்ளிக்கூடப் படிப்பு என்பது குழந்தைகளை சிறந்த வேலைக்காரர்களாக, அரசாங்கத்துக்கு அடங்கி ஒடுங்கி வாழும் மனிதர்களாக மாறும் வேலைகளை மட்டுமே செய்யும். இந்த உலகில் தைரியமாக தலைநிமிர்ந்து வாழ கற்றுத்தராது. இந்த உலகில் தலைநிமிர்ந்து வாழவும், பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், பெற்றோர்களும் குடும்ப உறவுகளும் தான் கற்றுத்தர வேண்டும்.
நமது பாரம்பரியம், பண்பாடு, நாகரீகம், வரலாறு; நம் முன்னோர்களின் வீரம், கலாச்சாரம் போன்றவற்றை சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும். இறைவன், மதம், சமயம், ஆன்மீகம் போன்ற விசயங்களை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். ஆன்மீக அறிமுகம் என்பது, நமது நம்பிக்கை, மூட நம்பிக்கை, மற்றும் பழக்க வழக்கங்களை பிள்ளைகளின் மீது திணிப்பதாக இருக்கக்கூடாது. நாம் கூறும் விசயங்களைக் கேட்டுச் சிந்தித்து, பிள்ளைகள் எதிர்க் கேள்விகள் கேட்கும் அளவுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் ஒவ்வொரு பிரச்சனையையும் பிள்ளைகளுடன் விவாதியுங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆலோசனைகளைக் கேளுங்கள். இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் புரியவையுங்கள். வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள், குறிப்பாக தினமும் நாளிதழை வாசிக்கத் தூண்டுங்கள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளைகளுக்கும் தங்களின் பிரச்சனைகளை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்று தோன்றும். நாளை பெரியவர்கள் ஆனதும் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளே அடக்கி வைக்காமல் மற்றவர்களுடன் கலந்தாலோசனை செய்து, அதற்கான தீர்வை தேடுவார்கள்.