எவையெல்லாம் சிறந்த உணவுகள்? எவையெல்லாம் ஆரோக்கியமான, உடலுக்கு உகந்த உணவுகள் என்று தெரிய வேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவு என்றால் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியம் என்றால் என்னவென்பதும் புரிய வேண்டும்.
எந்த நோயையும், எதிர்வினையையும், எந்த உடல் – மன பாதிப்பையும் உருவாக்காத உணவு வகைகள் தான் ஆரோக்கியமான உணவுகள் என்று ஏற்றுக் கொள்ளலாமா? என்றால், அது முடியாது. எந்த தீய எதிர்வினையையும் உருவாக்கவில்லை என்றாலும், உடலுக்கு எந்த நன்மையையும் வழங்காத உணவை எதற்காக உட்கொள்ள வேண்டும்? அவ்வாறென்றால் எவை ஆரோக்கியமான உணவு வகைகள்?
எந்த உணவாக இருந்தாலும், உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களையும், சக்தியையும் வழங்கும் என்றால் அவை நல்ல உணவுகள்.
இயற்கையில் விளைந்த இரசாயனம் கலக்கப்படாத, பதப்படுத்தப்படாத, அனைத்து உணவுகளும் உடலுக்கு உகந்த சிறந்த உணவுகளே. ஒவ்வொரு தனிநபர் உடலின் தன்மைக்கு ஏற்ப எளிதில் ஜீரணமாகக் கூடிய அனைத்து உணவுகளும் நல்ல உணவுகள், அவற்றை தாராளமாக உட்கொள்ளலாம்; ஆனால் பசியோடும் அளவோடும்.