ஆரோக்கியம்

எது உடலுக்குச் சிறந்த உணவு?

எது உடலுக்குச் சிறந்த உணவு? பல நாட்டு உணவு வகைகள் நம்மிடையே புழக்கத்தில் இருப்பதாலும், ஒவ்வொரு மருத்துவ முறையும் ஒரு வகையான உணவுப் பழக்கத்தை பரிந்துரை செய்வதாலும், எது உடலுக்குச் சிறந்த உணவு என்ற குழப்பம் பலருக்கும் உண்டு.

சிலர் என்னிடம், எதை உட்கொண்டால் அந்த நோய் குணமாகும்? எதை உட்கொண்டால் இந்த நோய் குணமாகும்? என்று கேட்பார்கள். அந்த சத்து உருவாக எதை உட்கொள்ள வேண்டும்? இந்த சத்து தேவையென்றால் எதை உட்கொள்ள வேண்டும்? என்றும் கேட்பார்கள். இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில் ஒன்றுதான்.

எவற்றை உட்கொள்ளலாம் என்று தெரிந்துக் கொள்வதை விடவும், எந்த உணவாக இருந்தாலும், அதை எவ்வாறு முறையாக உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்த உணவாக இருந்தாலும், சத்துகள் இருக்கின்றனவா அல்லது இல்லையா என்பது கூடத் தெரியாத எளிய உணவாக இருந்தாலும், அந்த உணவை உடலுக்கு ஏற்றவாறு முறையாக உட்கொண்டால், அந்த உணவின் ஜீரணத்தின் இறுதியில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உற்பத்தி ஆகிவிடும்.

இந்தக் கூற்று உண்மையா? ஒவ்வொரு குறிப்பிட்ட பழத்திலும், காய்கறியிலும், உணவிலும் ஒரு குறிப்பிட்ட சத்துகள் கிடைக்குமே, அது உடலுக்கு மிக அவசியம் அல்லவா என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு விடை காண ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

உணவிலிருந்து உருவாகும் சத்துக்கள்

தினமும் மூன்று வேளையும் கஞ்சியை மட்டுமே குடிக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு திருமணம் நடந்தால்; அவரால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

ஒரு வேளை கர்ப்பம் தரித்தாலும், அவரால் ஆரோக்கியமாக குழந்தையை ஈன்றெடுக்க முடியுமா? ஒருவேளை குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைக்கு கண்கள், காதுகள், வாய் மற்றும் மூக்கு இருக்குமா? அந்தக் குழந்தையின் உடலில் எலும்புகள் இருக்குமா? தசை இருக்குமா? சதைக்கு மேல் தோல் இருக்குமா?

அந்தக் குழந்தை வளருமா? அந்தக் குழந்தைக்கு பல் முளைக்குமா? முடி முளைக்குமா? அந்தக் குழந்தைக்கு உடலுக்கு அவசியமான எல்லா சத்துக்களும் இருக்குமா? நோய் எதிர்ப்புச் சக்தி இருக்குமா? அந்த குழந்தையின் உடலில் எல்லா உறுப்புகளும் இருக்குமா? அவை முழுமையாக இயங்குமா?

மேலே கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் ஆம். கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைக்கு என்ன என்னவெல்லாம் உடலில் இருக்குமோ, அவை அனைத்தும் அந்த ஏழை வீட்டுப் பிள்ளைக்கும் இருக்கும். சொல்லப்போனால் செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளை விடவும் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். காரணம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சத்துக்களை விடவும் உடல் உற்பத்தி செய்யும் சத்துக்களே முக்கியம்.

உடலில் சத்துகள் அதிகரிக்க எந்த உணவை உட்கொள்ள வேண்டும்?

ஒரு ஏழைப் பெண் உட்கொள்வதோ வெறும் கஞ்சி, நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி கஞ்சியில் இருப்பது வெறும் கார்போஹைட்ரேட். அந்த ஏழைத் தாயின் உடலுக்கு குழந்தையை வயிற்றில் உருவாக்க, வளர்க்க, உடலின் உறுப்புகளை உருவாக்க, வயிற்றில் இருக்கும் குழந்தையை நோய்களிலிருந்து பாதுகாக்க தேவைப்படும் சத்துக்கள் அனைத்தும் எங்கிருந்து கிடைத்தன?

ஒரு குழந்தை உருவாக கால்சியம், மெக்னீசியம், ப்ரோடின், கொழுப்பு, உப்பு, சர்க்கரை, உயிர்ச்சத்துகள், தாது சத்து என பல சத்துக்கள் தேவைப்படும் அல்லவா? அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் தேவைப்படும் எல்லா சத்துக்களையும் கொடுத்தது யார்? எங்கிருந்து கிடைத்தது?

அந்த தாய் உட்கொண்ட அரிசி கஞ்சியில் இருந்தே அந்தத் தாயின் உடல் தேவையான அனைத்து சத்துகளையும் சுயமாக உருவாக்கிக் கொண்டது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், நம்ப முடியாமலும் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. இன்றும் இந்தியக் கிராமப்புறங்களிலும் , மற்ற ஏழை நாடுகளிலும், வெறும் கஞ்சியோ, கூழோ குடித்துவிட்டு ஆரோக்கியமாக வாழும் மனிதர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.

உணவைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை

எந்த உணவையும் தேர்ந்தெடுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. உங்களுக்கு பிடித்தமானவற்றை உட்கொள்ளுங்கள் அது போதும். எந்த ஒரு சிறப்பு உணவும் தேவையில்லை. ஆனால் உணவை உட்கொள்ளும் வழிமுறைகள் மிகவும் முக்கியமானது.

உணவை உட்கொள்ளும் வழிமுறைகள்

  1. நன்றாகப் பசி உண்டாகும் வரை காத்திருக்க வேண்டும்.
  2. பசியில்லை என்றால் அமிர்தமாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
  3. சாப்பிடும் போது அதிகமாகத் தண்ணீர் அருந்தக்கூடாது.
  4. பசி அடங்கியதும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
  5. உணவை நன்றாகச் சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
  6. உணவின் சுவை மாறும் வரையில் மென்று விழுங்க வேண்டும்.
  7. சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் அரை மணி நேரத்திற்கு தண்ணீர் அருந்தக்கூடாது.
  8. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய, எளிதில் ஜீரணமாகக் கூடிய எந்த உணவை உட்கொண்டாலும், உங்கள் உடல் அதிலிருந்து தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் உருவாக்கிக்கொள்ளும்.

உணவிலிருந்து உருவாகும் சத்துக்கள்

ஒரு ஏழை விவசாயி வெறும் கஞ்சியைக் குடித்துவிட்டு, கடுமையாக உழைக்கிறார், கடினமான வேலைகளைச் செய்கிறார். ஆனால் பணக்காரரோ மிகவும் ஆரோக்கியமான, சத்து நிறைந்த (என்று நம்பும்) உணவுகளைச் சாப்பிடுகிறார், ஆனால் சாப்பாட்டுக்குப் பின்பு வயிற்று பாரமும், அசதியும், தூக்கமும் வந்து அவதிப்படுகிறார்.

இவை இரண்டுக்கும் என்ன காரணம்? உங்கள் பதிலை கீழே பதிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X