எதிரிகளையும் நேசிக்க பழகுங்கள். ஒரு மனிதர், அவர் மனதில் கோபத்தையும், வெறுப்பையும், பழிவாங்கும் எண்ணத்தையும், சேர்த்து வைத்திருப்பது, யாரோ ஒரு நபர் செய்த தப்புக்காக தன்னை தானே தண்டித்துக் கொள்வதற்குச் சமமானது. தனக்கு துன்பங்கள் உருவாக காரணமாக இருந்தவர்களை மறந்துவிட்டு, வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்வதுதான் புத்திசாலித் தனமான செயலாகும்.
சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும்; ஒரு மனிதர் தன் மனதில் கோபத்தையும், வெறுப்பையும், சேர்த்து வைப்பதனால் என்ன பயனை அடைந்துவிடப் போகிறார்? துன்பமும் வேதனையும் உருவாக காரணமாக இருந்தவர்கள் எங்கோ மகிழ்ச்சியாக வாழும் பொழுது, இங்கு இவர் பழைய நிகழ்வுகளைச் சுமந்துகொண்டு வேதனையை அனுபவிப்பதனால் யாருக்கு லாபம்? தப்பு செய்தவன் மகிழ்ச்சியாக வாழும் போது, அந்த துரோகத்தால் பாதிக்கப்பட்ட மனிதர் எதனால் வேதனையில் வாட வேண்டும்?
மனதில் கோபத்தையும், வெறுப்பையும், பழிவாங்கும் எண்ணத்தையும், சேர்த்து வைப்பது உடலின் சக்தியைக் குறைக்கிறது. மனதின் ஆரோக்கியத்தையும், உடலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மனதிலும் உடலிலும் நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது. பழைய விசயங்களை மறந்துவிடுங்கள், எதிரிகளை மன்னித்துவிடுங்கள். துன்பங்களிலிருந்து உங்களுக்கு நீங்களே விடுதலை அழித்துக் கொள்ளுங்கள்.
எதிரிகளை மன்னிக்கும் வழிமுறைகள்
1. எதிரியின் முகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.
2. அவரின் பெயரைச் சொல்லி அழையுங்கள்.
3. அவர் செய்த தவறுகளை நினைத்துப் பாருங்கள்.
4. இப்போது அவர் செய்த தவறுகள் அனைத்தையும் மனதார மன்னியுங்கள்.
5. உங்கள் எதிரியின் பெயரைக் கூறி, உங்களை மனதார மன்னித்து விட்டேன் என்று அவரிடம் அறிவித்துவிடுங்கள்.
6. எதிரியிடம் உங்களின் அன்பையும் கருணையையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
7. இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த கணக்கும் இல்லை, எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்து விடுங்கள்.
8. உடல், மனம், எண்ணம், உயிர், என்று அனைத்து நிலைகளிலும் அவரிடமிருந்து விடுதலை பெறுங்கள்.
எதிரிகளை மன்னிப்பது கடினம்தான், ஆனால் எதிரிகளை மன்னிப்பதின் மூலமாகத்தான் நீங்கள் மன அமைதியை அடைய முடியும். உங்கள் மனதில் ஒரு எதிரியை நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் சூட்சம நிலையில் நீங்களும், உங்கள் எதிரியும், அவர் செய்த துரோகமும் இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் உங்கள் எதிரியும், அவர் செய்த தவறுகளும் உங்கள் நினைவில் தோன்றி உங்கள் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டே இருக்க கூடும்.
ஒரு எதிரியை மன்னிக்கும் போது நீங்கள் உங்களை அவரிடம் இருந்தும், அவர் செய்த துரோகத்திலிருந்தும் விடுவித்துக் கொண்டு நிம்மதியையும், மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அடைகிறீர்கள். மனம் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.
“எதிரிகளின் மீது நாம் கொண்டிருக்கும் கோபம், எதிரி விரும்பும் வகையில் நமது சக்தியைக் கரையச் செய்யும்” – தோப்பாபேட