எதனால் மனிதர்கள் எதிலும் திருப்தி அடைவதில்லை? எவ்வளவு வசதிகள் நம்மிடம் இருந்தாலும் இல்லாததை மட்டுமே மனம் நினைத்துப் பார்க்கிறது, தேடுகிறது. ஏன்? தன்னிடம் எவ்வளவு இருந்தாலும் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல், இருப்பது போதவில்லை என்ற எண்ணத்துடன் மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று பலர் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கு ஓடுகிறார்கள்? எதைத் தேடுகிறார்கள்? என்பது ஓடுபவர்களுக்குக் கூட பெரும்பாலும் தெரிவதில்லை, அவர்கள் அதனை சிந்திப்பதுமில்லை.
குழந்தைகளுக்கு ஐம்பது காசு மிட்டாய் வழங்கும் மகிழ்ச்சியை, திருப்தியை பெரியவர்களுக்கு ஐந்து சவரன் நகை வழங்குவதில்லையே ஏன்? பல காலம் ஆசைப்பட்டு சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒரு தங்கச் சங்கிலி வாங்கினாலும், அந்த கடையில் பார்த்த தோட்டையும் சேர்த்து வாங்கி இருக்கலாமே என்ற ஏக்கம் உருவாகிறதே ஒழிய, வாங்கிய சங்கிலியை நினைத்து மனம் மகிழ்வதில்லையே ஏன்?
கடின உழைப்பிற்குப் பிறகு வீடு கட்டி குடி புகுந்தாலும் சில மாதங்களிலேயே, இந்த வீட்டை அப்படிக் கட்டியிருக்கலாம், இப்படிக் கட்டியிருக்கலாம், அந்த இடத்தில் கட்டியிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்கும் என்ற எண்ணங்கள் உருவாவது எதனால்?
நம்மிடம் கார், பைக் இருந்தாலும், அடுத்தவர் பயன்படுத்தும் வாகனங்கள் நம்மை அதிகம் கவர்வது ஏன்? நாம் சிறுவர்களாக இருந்தபோது ஒரு மிட்டாய், ஒரு பொறி உருண்டை, ஒரு தேங்காய் கீற்றில் கிடைத்த மனத் திருப்தி, தற்போது எதிலுமே கிடைப்பதில்லையே ஏன்?
மனம் எதிலும் திருப்தி அடையாமல் ஓடிக்கொண்டே இருப்பதற்கு ஒரே காரணம், நாம் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. கடந்த காலத்திலோ, எதிர் காலத்திலோ நமது வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். கடந்த காலத்தில் அல்லது எதிர் காலத்தில் வாழ்வது என்பது சூதாடுவதைப் போன்றது, பெரும்பாலும் யாரும் வெற்றி பெறுவதில்லை. இந்த முறை தோற்றாலும், அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மாயை மட்டுமே மிஞ்சும். கற்பனைகளையும் மாயையையும் துரத்திக்கொண்டு ஓடுவதால் மனம் திருப்தி அடையாமல், அலைந்து கொண்டே இருக்கிறது.