எதனால் கண்ட நேரத்தில் தூக்கம் வருகிறது? வெகுநேரம் வாகனங்களை ஓட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் இருக்க வாய்ப்புகள் அதிகம். இரவில் நீங்கள் வெகுநேரம் வாகனம் ஓட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். வாகனம் ஓட்டும் போது, உறங்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ நிச்சயமாக இருக்கப்போவதில்லை. போக வேண்டிய இடத்துக்கு பாதுகாப்பாக போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும், அவ்வாறு இருக்கும் போது, வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏன் தூக்கம் வருகிறது?
கார் மட்டுமல்லாமல், லாரி, பஸ், ஆட்டோ, அவ்வளவு ஏன் பைக் ஓட்டும் போது தூங்கி விபத்துக்கு உள்ளானவர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன். கார் சத்தமின்றி அமைதியாக இருக்கும் அதனால் தூங்கி விடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட பைக் ஓட்டுபவர்கள் ஏன் தூங்குகிறார்கள்? சாதாரண நேரத்தில், வீட்டில் உறங்கும் போது, சிறு சத்தம் கேட்டாலும் விழித்துக்கொள்வோம். அவ்வாறு இருக்கையில்; பைக்கின் சத்தம், மற்ற வாகனங்களின் சத்தம் மற்றும் காற்றின் அழுத்தம் அனைத்தையும் மீறி எவ்வாறு தூங்குகிறார்கள்?
சற்று சிந்தியுங்கள் இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருக்க முடியுமா? இல்லை, வாகனங்கள் ஓட்டும் போது தூங்குவதற்குக் காரணம், தூக்கம் நாம் ஆசைப்படும் போது வருவதில்லை, மாறாக நமக்குத் தேவைப்படும் போது வருகிறது. நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அது எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் கவலையில்லை, உடலில் சக்தி தட்டுப்பாடு ஏற்பட்டால், தூக்கம் தானாக வந்துவிடும். யாருடைய அனுமதியும் கோரி நிற்காது. அதை மீறித் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தால் அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.
குழந்தைகளை சற்று கவனித்தால் புரியும். குழந்தைகள் சாப்பிடுவது, விளையாடுவது என்று எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் தூக்கம் வந்தால் அப்படியே தூங்கி விடுவார்கள். சில தாய்மார்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கிறேன் என்ற பெயரில், குழந்தைகளை வற்புறுத்தி தூங்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகள் தூங்காமல் அடம்பிடிப்பார்கள். சில தாய்மார்கள் தூக்கத்தை மீறி குழந்தைகளை படிக்கச் சொல்வார்கள். இரண்டுமே தவறான அணுகுமுறையாகும்.
எப்போது தூக்கம் வந்தாலும் தூங்கிவிட வேண்டும். குழந்தைகளைக் கவனித்தால் புரியும், குழந்தைகள் உடலை எதிர்த்து எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள். உடல் என்ன சொல்கிறதோ கட்டுப்படுவார்கள், காரணம் அவர்கள் இயற்கையோடு இணைந்து இருக்கிறார்கள், பெரியவர்கள் ஆக ஆக இயற்கையை விட்டு விலகி வருவதால், உடல் என்ன சொல்கிறது என்று பலருக்கு விளங்குவதில்லை. உடலின் பாசை புரியாமல், உடலை எதிர்த்துச் செயல்பட்டு, நோய்வாய்ப்படுகிறார்கள்.