எதனால் மனிதர்களுக்கு மனத் திருப்தி உண்டாவதில்லை? காலையில் உங்களுக்குப் பசி உண்டாகிறது, பசியாறுவதற்காக ஒரு உணவகத்திற்குச் செல்கிறீர்கள். அங்கே தோசை, இட்லி, பூரி, பொங்கல், இடியாப்பம், மேலும் பல்வேறு உணவு வகைகளை வைத்திருக்கிறார்கள். உங்களுக்குத் தோசை சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறது. நீங்கள் ஒரு தோசையைக் கேட்டு வாங்கி சாப்பிடத் தொடங்குகிறீர்கள்.
நீங்கள் சாப்பிடத் தொடங்கும்போது உங்களின் எதிரே அமர்ந்திருப்பவர்களைக் கவனிக்கிறீர்கள் ஒருவர் மசாலா தோசையைச் சாப்பிடுகிறார், அவருக்கு அருகில் அமர்ந்திருப்பவர் ரவா தோசையைச் சாப்பிடுகிறார். நீங்கள் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பாகவே உங்களின் எண்ணம் மாறத்தொடங்கும், நீங்கள் விருப்பப்பட்டுக் கேட்ட தோசை இப்போது பிடிக்காமல் போகும். நாமும் வேறு வகையான தோசையைக் கேட்டு வாங்கி இருக்கலாம் என்ற எண்ணம் உதயமாகும்.
நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வலது பக்கத்து மேசையில் ஒருவர் பொங்கல் சாப்பிடுகிறார், இன்னொருவர் பூரி சாப்பிடுகிறார், இடது பக்கத்து மேசையில் ஒருவர் உப்புமா சாப்பிடுகிறார். அவற்றைப் பார்த்தவுடன் உங்களுக்கு அவற்றின் மீதும் விருப்பம் உண்டாகிறது.
உங்கள் தட்டில் என்ன இருக்கிறது? உங்களுக்கு என்ன வழங்கப்பட்டிருக்கிறது? என்பதைக் கவனிக்காமல் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே உங்களின் தோசையைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்கள் என்ற உணர்வு கூட இல்லாமல், உங்கள் எண்ணம் முழுவதும் மற்றவர்களின் இலைகளின் மீதே இருக்கும். அந்த தோசை எவ்வளவு சுவையாக இருந்தாலும், அதற்கு வழங்கப்பட்ட சாம்பார் மற்றும் சட்டினிகள் உயர்ந்த சுவையுடனும் மணமாகவும் இருந்தாலும் அவற்றை உங்களால் அனுபவிக்க முடியாது.
அந்த தோசையை உட்கொண்ட பிறகு உங்கள் வயிறு நிறையலாம் ஆனால் மனம் நிறையாது. உணர்வில்லாமல் உட்கொண்டதால் அந்த உணவிலிருந்து கிடைக்கக் கூடிய சுவையையும் மனத்தையும் உணர்வையும் திருப்தியையும் உங்களால் அனுபவிக்க முடியாமல் போகும். முழு அனுபவமும் கிடைக்காததால் மனதில் அமைதி உண்டாகாமல், திருப்தியற்ற மனநிலை தொடரும்.
உணவு உட்கொள்வதில் தொடங்கி, தாம்பத்தியம், குழந்தைகள், நட்பு, கல்வி, சொத்து, சுகம், செல்வம், தொழில், வேலை, புகழ், என முழு ஈடுபாடில்லாமல் ஈடுபடும் எந்த செயலிலும் முழு வெற்றியும், மனத் திருப்தியும் உண்டாகாது.