எதை சாப்பிட்டால் நோய்கள் குணமாகும்? எதைச் சாப்பிட்டால் அந்த நோய் குணமாகும்? எதைச் சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். மேலும் சிலர், அந்த சத்து உருவாக எதைச் சாப்பிட வேண்டும்? இந்த சத்து தேவையென்றால் எதைச் சாப்பிட வேண்டும்? என்று கேட்பார்கள். இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில்.
என்ன சாப்பிடலாம் என்று தெரிந்துக் கொள்வதை விட எந்த உணவாக இருந்தாலும், அதை எவ்வாறு முறையாகச் சாப்பிடுவது என்று கற்றுக்கொள்ளுங்கள். எந்த உணவாக இருந்தாலும் அதை முறையாகச் சாப்பிட்டால், அந்த உணவின் செரிமானத்தின் இறுதியில் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைத்துவிடும்.
இது உண்மையா? ஒவ்வொரு குறிப்பிட்ட பழத்திலும், காய்கறியிலும், உணவிலும் சில குறிப்பிட்ட சத்துகள் கிடைக்குமே, அது உடலுக்கு மிக முக்கியம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கு விடைக்காண ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
தினமும் மூன்று வேளையும் கஞ்சியை மட்டுமே குடிக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு திருமணம் நடந்தால்; அந்த பெண் கர்ப்பம் தரிப்பாளா? அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்குமா? குழந்தை பிறந்தால்;
1. அந்தக் குழந்தைக்கு கண்கள், காதுகள், வாய் மற்றும் மூக்கு இருக்குமா?
2. அந்தக் குழந்தையின் உடலில் எலும்புகள் இருக்குமா?
3. அந்தக் குழந்தைக்கு தோல் இருக்குமா?
4. அந்தக் குழந்தை வளருமா?
5. அந்தக் குழந்தைக்கு பல் முளைக்குமா?
6. அந்தக் குழந்தைக்கு முடி முளைக்குமா?
7. அந்தக் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்குமா?
8. அந்தக் குழந்தைக்கு எல்லாச் சத்துக்களும் இருக்குமா?
9. அந்த குழந்தையின் உடலில் எல்லா உறுப்புகளும் இருக்குமா?
10. அந்தக் குழந்தையின் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் இயங்குமா?
மேலே கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் ஆம். செல்வந்தர் வீட்டுக் குழந்தைக்கு என்னவெல்லாம் உடலில் இருக்குமோ, அவை அனைத்தும் அந்த ஏழை வீட்டுக் குழந்தைக்கும் இருக்கும். சொல்லப்போனால் செல்வந்தர் வீட்டுக் குழந்தையை விட ஆரோக்கியமாக இருக்கும்.
மேலே உள்ள உதாரணத்திலிருந்து நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய, எளிதில் ஜீரணமாகக் கூடிய எந்த உணவை உட்கொண்டாலும்; தனக்குத் தேவையான சத்துக்களை உடல் சுயமாக உற்பத்தி செய்து கொள்ளும். சத்துக்காக என்று எந்த உணவையும் பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை.
Leave feedback about this