பொது

ஏர்வாடி தர்காவில் ஏற்பட்ட அனுபவம்

ஏர்வாடி தர்காவில் ஏற்பட்ட அனுபவம். தமிழகம் செல்லும் போதெல்லாம் வாய்ப்புக் கிடைத்தால் ஏர்வாடி தர்காவிற்குச் செல்வது வழக்கம். ஒருமுறை தமிழகம் சென்றிருந்த போது ஒரு வியாழக்கிழமை ஏர்வாடி தர்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கு இருக்கும் சூழ்நிலைகளையும், கட்டிட அமைப்புகளையும், அங்கிருக்கும் மக்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு தனியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தேன். ஏர்வாடி தர்காவின் வராண்டாவில் அமர்ந்து அங்கிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் நடவடிக்கைகளையும், அவர்களின் செயல்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.

கேரளாவிலிருந்து செய்வினைக்கு ஆளானவர்களும், பேய் பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களும் அதிகமாக வந்திருந்தார்கள். அவர்களில் ஒருசிலர் சில விசித்திரமான செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள். தர்காவைச் சுற்றி ஓடுவது, வெறும் தரையில் பல்டி அடிப்பது, கத்துவது, வேகமாக ஓடிவந்து கட்டிடத் தூணில் இடித்துக்கொள்வது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, என்று ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் தர்காவின் வாசலைப் பார்த்து தன் முன்னே யாரோ நிற்பதைப் போன்று பேசியும் வாதாடியும் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் வேகமாக ஓடி வந்து குதித்து தன் நெஞ்சை தர்கா தூணில் இடித்துக் கொண்டார், அவர் மீண்டும் மீண்டும் பலமுறை ஓடிவந்து அந்த தூணில் இடித்துக் கொண்டே இருந்தார். பின்பு அந்த மக்காமை சுற்றிச் சுற்றி வந்தார். அவர் ஏதோ தனக்குத் தானே தண்டனைக் கொடுத்துக் கொள்வதைப் போன்று இருந்தது.

அந்த சூழ்நிலையில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஓர் இளம் பெண்ணைக் கண்டேன். அந்தப் பெண்ணுக்கு என்ன பாதிப்பு என்று தெரியவில்லை செய்வினையாக இருக்கலாம் அல்லது பேய் பிசாசுகளின் தொந்தரவாக இருக்கலாம். அந்தப் பெண் மக்காமைச் சுற்றி ஓடுவதும் அதன் வாசல் வந்ததும் தரையில் பல்டி அடிப்பதும் என மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தார். எனக்குப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அப்போதுதான் எனது அகங்காரம் வேலைச்செய்யத் தொடங்கியது.

நமக்குத்தான் ரெய்கி ஹீலிங் தெரியுமே, அதைப் பயன்படுத்தி அந்த பெண்ணை குணப்படுத்த முயற்சி செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. நானும் அந்தப் பெண் என்னை கடக்கும் போதெல்லாம் ரெய்கி ஹீலிங் செய்து கொண்டிருந்தேன். ஆனால் அந்தப் பெண்ணுக்கு எந்த மாற்றமும் நிகழவில்லை அவர் எப்போதும் போல் ஓடிக் கொண்டும் பல்டி அடித்துக் கொண்டும் இருந்தார்.

சற்று நேரம் கழித்து நான் அங்கிருந்த கழிவறையை நோக்கி நடந்தேன். அந்த கழிவறைக்குச் செல்லும் வழியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலரை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்கள். அங்குச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்னைப் பார்த்து… “உனக்குத் தெரியாத வேலையைச் செய்யாதே” என்று கூறினார்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டதைப் போன்று இருந்தது. அந்த வாக்கியம் என்னை நோக்கிக் கூறப்பட்டது என்பது புரிந்தது. ஆச்சரியத்துடன் திரும்பி அவரைப் பார்த்தேன், அவர் ஒன்றும் தெரியாதவரைப் போன்று மீண்டும் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் நான் உணர்ந்தேன். அந்த குரல் அவருடையது, ஆனால் பேசியது அவரில்லை என்பதை.

நான் அந்த இடத்தில், அந்த சூழ்நிலையில் ஹீலிங் செய்தது தவறு என்று எச்சரிக்கப்பட்டேன். அந்த பெண்ணுக்கு என்ன கோளாறு? அந்த பெண்ணின் உடலை ஆட்டிவைப்பது யார்? என்பன எதுவும் தெரியாமல் ஹீலிங் செய்ய முயன்றது மிகப்பெரிய தவறு. அந்த செயல் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் பல பாதிப்புக்களை உண்டாக்கக் கூடும் என்பதால் எச்சரிக்கப்பட்டேன். எல்லோரும், எல்லா சூழ்நிலையிலும், எல்லா விசயங்களையும் செய்யக் கூடாது என்பது புரிந்தது.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X